

புகழ்பெற்ற இந்திய இயக்குனர் ராஜமவுலி, பாகுபலி படங்கள் மூலம் உலகையே திரும்பி பார்க்க வைத்தார். தமிழில் நான் ஈ படத்தையும் இயக்கி உள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் ஆர்.ஆர்.ஆர். படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் ராஜமவுலி டெல்லி விமான நிலையத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், அன்பான டெல்லி விமான நிலையம். நான் நள்ளிரவு 1 மணிக்கு விமானத்தில் வந்து இறங்கினேன். அப்போது கொரோனா பி.சி.ஆர். பரிசோதனைக்கான விண்ணப்ப படிவங்கள் எனக்கு கொடுக்கப்பட்டன. அனைத்து பயணிகளும் தரையில் அமர்ந்தும், சுவற்றில் வைத்தும் படிவங்களை நிரப்பிக்கொண்டு இருந்தார்கள். அது பார்ப்பதற்கு நன்றாக இல்லை. அவர்களுக்கு மேஜை வசதிகள் செய்து கொடுப்பது ஒரு எளிமையான சேவைதான். மேலும் வெளியே செல்லும் வாயில் அருகில் நிறைய தெருநாய்கள் நிற்பதை பார்த்து ஆச்சரியமானேன். இது வெளிநாட்டவர்கள் இந்தியா வரும்போது நம்மீது நல்ல பார்வையை ஏற்படுத்தாது. இதன் மீது தயவு செய்து நடவடிக்கை எடுங்கள். நன்றி'' என்று கூறியுள்ளார்.