’கருப்பு நாள்’: நடிகை மனிஷா கொய்ராலா வெளியிட்ட திடீர் பதிவு

நேபாளத்தில் நேற்று நடைபெற்ற வன்முறையை கண்டிக்கும் விதமாக “கருப்பு நாள்” என்று மனிஷா கொய்ராலா பதிவிட்டுள்ளார்.
90களில் இந்திய அளவில் பிரபலமாக இருந்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. இவர் மணிரத்னம் இயக்கிய பம்பாய் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து இந்தியன், முதல்வன், ஆளவந்தான், பாபா, மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற படங்களில் உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்தார்.
பாலிவுட் படங்களில் பலவற்றிலும் நடித்துள்ள மனிஷா கொய்ராலா நேபாளத்தை சேர்ந்தவர். தற்போது பாலிவுட் படங்களிலும், ஓடிடி தளங்களிலும் வெளிவரும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று தனது சமூக வலைத்தளத்தில் “கருப்பு நாள்” என்று பதிவிட்டுள்ளார். நேபாளத்தில் பேஸ்புக், யூடியூப், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு நேபாள அரசு திடீர் தடை விதித்ததை எதிர்த்து நேற்று நடைபெற்ற வன்முறையில் 19 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனையடுத்து, இந்த தடை உத்தரவை நேபாள அரசு வாபஸ் பெற்றுள்ளது. போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளையும், அரசின் அடக்குமுறையையும் கண்டிக்கும் விதமாக “கருப்பு நாள்” என்று மனிஷா கொய்ராலா பதிவிட்டுள்ளார்.






