"இசை அரசனை களங்கப்படுத்தும் எண்ணம் சிறிதளவும் இல்லை" கருப்பு பட தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

தங்கள் பெயரை பயன்படுத்து வரும் காட்சி என்பது செய்தியை கடத்தும் நோக்கத்திற்காக கையாளப்பட்ட தற்செயல் நிகழ்வு என கூறப்பட்டுள்ளது.
"இசை அரசனை களங்கப்படுத்தும் எண்ணம் சிறிதளவும் இல்லை" கருப்பு பட தயாரிப்பு நிறுவனம் விளக்கம்
Published on

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 15-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘கருப்பு’ தற்போது பாக்ஸ் ஆபீஸில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக கொண்டு, அதனுடன் கடவுள் நம்பிக்கைகளை இணைத்து உருவாக்கப்பட்ட இப்படம், பல தடைகளை கடந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் மூலம் நடிகர் சூர்யாவிற்கு ஒரு வலுவான கம்பேக் படமாகவும் அமைந்துள்ளது.

இந்தநிலையில், கருப்பு திரைப்படத்தில், பாடல் காப்புரிமை தொடர்பாக இளையராஜா வழக்கு தொடர்வது குறித்து ஒரு காட்சி இடம்பெற்றிருப்பது சர்ச்சையான நிலையில் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக கருப்பு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,

கருப்பு திரைப்படத்தில் தங்கள் பெயரைப் பயன்படுத்தி வரும் காட்சி என்பது செய்தியை கடத்தும் நோக்கத்திற்காக கையாளப்பட்ட ஒரு தற்செயல் நிகழ்வு.

50 ஆண்டுகளுக்கு மேலாக இசை உலகை ஆட்சி செய்யும் இசை அரசனை, காயப்படுத்தும் எண்ணமோ, களங்கப்படுத்தும் எண்ணமோ படக்குழுவிற்கு சிறிதளவும் இல்லை.

உள்நோக்கம் ஏதுமின்றி வைக்கப்பட்ட காட்சியினால், தாங்களோ, தங்களைச் சார்ந்தவர்களோ, இசை ஞானியின் ரசிகர்களோ, பிறரோ, மனம் புண்பட்டிருந்தால், அதற்கு எங்களின் தாழ்மையான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com