"போகி" திரைப்பட விமர்சனம்


போகி திரைப்பட விமர்சனம்
x

இயக்குனர் எஸ்.விஜயசேகரன் இயக்கிய போகி திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

சென்னை,

மலையோர கிராமத்தில் தனது தங்கை சுவாசிகா உடன் வாழ்ந்து வருகிறார் நபி நந்தி. பெற்றோர் இல்லாத போதும் தனது ஒரே தங்கையைப் பாசமாக வளர்த்து வருகிறார். பிளஸ்-2 தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக வரும் சுவாசிகா மருத்துவம் படிக்க விரும்புகிறார். மருத்துவ வசதி இல்லாத தனது கிராமத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் வேறு ஊருக்கு படிக்கச் செல்கிறார் சுவாசிகா. அங்கு மருத்துவ கல்லூரியில் நடக்கும் ஒரு சம்பவம் அவரது வாழ்க்கையைத் தலைகீழாக புரட்டிப்போடுகிறது.

அது என்ன? சுவாசிகாவுக்கு என்ன ஆனது? இந்த மலையோர கிராமத்துக்கு மருத்துவ வசதி கிடைத்ததா? என்பதே கதை. கிராமத்து இளைஞராகவே வாழ்ந்திருக்கும் நபி நந்தி, எதார்த்தமான நடிப்பால் கவர்கிறார். இடையிடையே 'ஓவர் பாசம்' காட்டி கோபப்படுத்துகிறார். சுவாசிகாவின் நடிப்பு பலம் சேர்த்துள்ளது. மருத்துவக் கல்லூரியில் நடக்கும் கொடுமைகளைக் கண்டு அவர் பொங்கி எழும் காட்சிகள் விறுவிறுப்பு.

மொட்டை ராஜேந்திரன், வேலராமமூர்த்தி, சங்கிலி முருகன், எம்.எஸ்.பாஸ்கர், சரத் ஆகியோரின் நடிப்பில் குறையில்லை. பூனம் கவுரின் ஆட்டம் ஆறுதல். மலையோர கிராமத்தில் மூச்சு வாங்க கேமராவை தூக்கி பணியாற்றி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜா சி.சேகர். மரியா மனோகரின் இசை படத்துடன் ஒன்ற வைக்கிறது. பின்னணி இசை ஒட்டவில்லை.

எதார்த்தம் நிறைந்த காட்சிகள் படத்துக்கு பலம். இரண்டாம் பாதியில் தொடர்பில்லா காட்சிகள் பலவீனம். தெளிவில்லாத சில காட்சிகளில் குழப்பம் ஏற்படுகிறது. ஏற்கனவே பார்த்து பழக்கப்பட்ட கதைக்களம் என்றாலும், புதிய அணுகுமுறையில் கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் எஸ்.விஜயசேகரன். பிணவறையில் நடக்கும் பாலியல் அத்துமீறல் கொடுமை.

போகி - புகைச்சல்.

1 More update

Next Story