

மும்பை,
மும்பை ஜூகு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தி நடிகர் டைகர் ஷெராப் சென்ற கார் மீது கும்பல் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தில் டைகர் ஷெராப் லேசான காயங்களுடன் மயிரிழையில் உயிர் தப்பினார். மேலும் அவரது டிரைவர்கள் உள்பட 2 பேர் குண்டு பாய்ந்து காயமடைந்தனர்.
இந்த சம்பவத்துக்கு பிரபல பிஷ்னோய் தாதா கும்பல் பொறுப்பேற்று உள்ளது. இது தொடர்பாக போலீசார் துப்பாக்கியால் சுட்ட 3 பேர் உள்ளிட்டவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். நடிகர் சல்மான்கானை கொல்வதுதான் பிஷ்னோய் கும்பலின் இலக்காக இருந்ததும், அவர் அதிதீவிர பாதுகாப்பு வளையத்தில் இருப்பதால் அவரை கொல்ல முடியாததால், சதி திட்டத்தை மாற்றி நடிகர் டைகர் ஷெராப்பை சுட்டுக்கொன்று இந்தி திரையுலக நட்சத்திரங்களை பயமுறுத்த முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் மும்பை மாநகராட்சி அலுவலகத்துக்கு ஸ்மித் ஜான்சன் என்ற நபரின் பெயரில் இருந்து மின்னஞ்சல் ஒன்று வந்தது. அந்த மின்னஞ்சலில் வருகிற 31-ந் தேதி மும்பை ஜூகுவில் உள்ள நடிகர் அமிதாப் பச்சனின் 'ஜல்ஷா' பங்களா மீது கையெறி குண்டு தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
இதேபோல நவம்பர் 27-ந் தேதி மகாலெட்சுமி ரேஸ்கோர்சில் நடைபெற உள்ள பாடகர் தில்ஜித் தோசஞ்சின் இசை நிகழ்ச்சியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்படும் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. அதே இ-மெயிலில் பள்ளிகள், மும்பை மேயர் அலுவலகத்திலும் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கப்பட்டு இருந்தது. மேலும் மின்னஞ்சலில் 'காலிஸ்தான் ஜிந்தாபாத்' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே காலிஸ்தான் பயங்கரவாதிகள் இந்த மிரட்டலை விடுத்தார்களா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று போலீசார் நடத்திய சோதனையில் மேயர் அலுவலகத்தில் இருந்து சந்தேகத்துக்கு இடமாக எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை. நடிகர் அமிதாப்பச்சன், தில்ஜித் தோசஞ்சிற்கு வந்த கொலை மிரட்டலின் உண்மை தன்மை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இந்தி திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.