கேன்ஸ் திருவிழா: மணமகள் உடை, முதலை நெக்லெஸ் என கலக்கிய இந்திய நடிகைகள்

கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் இந்திய நடிகைகள் பாரம்பரிய மணமகள் உடை மற்றும் முதலை நெக்லெஸ் என அணிந்து சென்று பார்வையாளர்களை கவர்ந்தனர்.
கேன்ஸ் திருவிழா: மணமகள் உடை, முதலை நெக்லெஸ் என கலக்கிய இந்திய நடிகைகள்
Published on

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பிரான்சில் 76-வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா மே 16-ந்தேதி தொடங்கியது. வருகிற 27-ந்தேதி வரை 12 நாட்கள் விழா கோலாகலமுடன் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில், இந்தியா சார்பில் நடிகைகள் சாரா அலி கான், மனுஷி சில்லார், ஈஷா குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  கேன்ஸ் திருவிழாவில் ஹாலிவுட் நட்சத்திரங்களுடன் இந்திய திரை துறையை சேர்ந்த நடிகைகளும் பங்கேற்றனர்.

இந்தி படங்களில் நடித்து வரும் நடிகை சாரா அலி கான் மணமகள் அணியும் லெகங்கா உடையை அணிந்தபடி அரங்கில் நடந்து வந்து பார்வையாளர்களை கவர்ந்துள்ளார். விழாவில் அவர் கூறும்போது, பதற்றமுடன் இருக்கிறது. ஒரு நாள் இந்த திருவிழாவில் கலந்து கொள்வேன் என்று எப்போதும் ஒரு நம்பிக்கையுடனேயே இருந்தேன். தற்போது என்னாலேயே என்னை நம்ப முடியவில்லை. 

அபு மற்றும் சந்தீப் கோஸ்லா வடிவமைத்த பாரம்பரியம் மற்றும் நவீன இந்தியாவின் அம்சம் கொண்ட கையால் தயாரிக்கப்பட்ட ஆடையிது என அவர் அணிந்திருந்த லெகங்கா ஆடை பற்றி பெருமையுடன் கூறினார்.

இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்த நடிகை ஊர்வசி ரவுதலா. கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் பிங்க் வண்ண கவுன் அணிந்தபடியும், முதலை நெக்லெஸ் ஒன்றை அணிந்தும் வந்தது பார்வையாளர்களை ஈர்த்தது. உலக அழகி பட்டம் வென்ற நடிகை மனுஷி சில்லார் வெள்ளை நிற கவுனில் அசத்தினார்.

நடிகை ஈஷா குப்தாவும் வெள்ளை நிற ஆடை அணிந்து, கழுத்து பகுதியில் அதிக கட் வைத்த மேலாடை மற்றும் கீழாடையும் என தோன்றினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வது என்பது அவருக்கு முதன்முறை. அதனால், முதன்முறையே பார்வையாளர்களை கவரும் வகையிலான ஆடைகளை அணிந்து அசத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அதிக பரிசு தொகை கொண்ட பால்மே டிஆர் உள்ளிட்ட பல கவுரவமிக்க விருதுகள் வழங்கப்பட உள்ளன.

View this post on Instagram

இதில் கலந்து கொள்ளும் திரை நட்சத்திரங்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் மேற்கத்திய பாணியிலான உடைகளை அணிவது வழக்கம். எனினும், நமது பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையை அணிந்தபடி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை இணை மந்திரி முருகன் சிவப்பு கம்பளத்தில் நடந்து சென்றார். ஒரு தமிழனாய் பெருமிதம் கொள்கிறேன் என அவர் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இன்று நடைபெற்ற சிவப்பு கம்பள வரவேற்பில் தமிழ் பாரம்பரிய அடையாளமான வேஷ்டி சட்டை அணிந்து பங்கேற்பதில் ஒரு தமிழனாய் பெருமிதம் கொள்கிறேன்.

ஜி-20 மாநாட்டிற்கு இந்தியா தலைமையேற்றுள்ள இந்த தருணத்தில் #G20India சின்னம், நமது தேசியக்கொடி பொறித்த பாரம்பரிய ஆடையை அணிந்து உலக அரங்கில் அடியெடுத்து வைப்பது ஒவ்வொரு இந்தியருக்கும், தமிழருக்கும் பெருமிதமான தருணம் என அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த விழாவில் ஆஸ்கார் விருது வென்ற, தி எலிபேண்ட் விஸ்பரர்ஸ் பட தயாரிப்பாளர் குனீத் மொங்காவுடனும் அவர் ஒன்றாக தோன்றினார்.

விழாவில் அவர் கூறும்போது, எனது சட்டையில் உள்ள எம்பிராய்டரி வடிவமைப்பை, என்னுடைய உள்ளூர் தையல்காரர் மேற்கொண்டார். எனது நெஞ்சில் மூவர்ணம் அணிந்தது அதிக பெருமையுடையவராக என்னை ஆக்கியுள்ளது என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டு, முதன்முறையாக கவுரவத்திற்கான நாடாக அதிகாரப்பூர்வ முறையில் இந்தியாவின் பெயர் அறிவிக்கப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com