நிலம் தொடர்பாக நடிகை ஸ்ரீதேவியின் குடும்பத்தினருக்கு எதிரான வழக்கு நிராகரிப்பு

செங்கல்பட்டு கோர்ட்டில் ஸ்ரீதேவி குடும்பத்தினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள உரிமையியல் வழக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
நிலம் தொடர்பாக நடிகை ஸ்ரீதேவியின் குடும்பத்தினருக்கு எதிரான வழக்கு நிராகரிப்பு
Published on

சென்னை,

மறைந்த நடிகை ஸ்ரீதேவி, 1988-ம் ஆண்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 2.7 ஏக்கர் நிலத்தை, சம்பந்த முதலியார் என்பவரின் குடும்பத்தினரிடம் இருந்து வாங்கியுள்ளார். கடந்த 37 ஆண்டுகளாக சொத்தை அனுபவித்து வந்த நிலையில், சம்பந்த முதலியாரின் மகன் சந்திரசேகரன் முதலியாரின் இரண்டாவது மனைவியின் மகன் நடராஜன், மகள் சிவகாமி ஆகியோர் வாரிசு சான்றிதழ் பெற்று, சொத்து விற்பனையை செல்லாது என அறிவிக்கக் கோரியும், சொத்தில் பங்கு கோரியும் செங்கல்பட்டு கோர்ட்டில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், அவரது மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் செங்கல்பட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதை விசாரித்த செங்கல்பட்டு கோர்ட்டு, போனி கபூர் குடும்பத்தினரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து போனி கபூர், ஜான்வி கபூர், குஷி கபூர் கூட்டாக சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.வி.தமிழ்செல்வி, ”வழக்கை நிராகரிக்க கோரி ஸ்ரீதேவி குடும்பத்தார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து செங்கல்பட்டு கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன். செங்கல்பட்டு கோர்ட்டில் ஸ்ரீதேவி குடும்பத்தினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள உரிமையியல் வழக்கையும் நிராகரிக்கிறேன்” என்று உத்தரவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com