

மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் விநாயகன். இவர் தமிழில் திமிரு, மரியான், சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஜெயிலர் திரைப்படம் மூலம் தமிழில் கவனம்பெற்ற நடிகராக மாறினார் விநாயகன். இவர் தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார். நடிகர் ரஜினியுடன் ‘ஜெயிலர் 2’ படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படம் அக்டோபர்15ஆம் தேதி வெளியாகவுள்ளது.
மது அருந்தி விட்டு வழக்குகளில் அடிக்கடி சிக்குவது நடிகர் விநாயகனின் வழக்கமான ஒன்றாகவே இருக்கிறது. மது போதையில் அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் தகராறு மற்றும் சில சம்பவங்கள் அவரை போலீஸ் நிலையம் வரை கொண்டு சென்று நிறுத்தியது. ஆனால், இந்த முறை சிறுமி புகைப்படத்தினால் வந்துள்ளதால் மிகுந்த சர்ச்சையாகியுள்ளது.
இந்நிலையில் விநாயகன் மீது கேரள மாநிலம் தாழக்கரையை சேர்ந்த ஒருவர் குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தில்புகார் செய்துள்ளார். அவரது புகார் மனுவில், 8 வயதுக்கு உட்பட்ட தனது மகள் புகைப்படத்தை விநாயகன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் சிறுமியின் தந்தை புகார் அளித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து கேரள மாநில குழந்தைகள் பாதுகாப்பு இயக்குநரகத்தின் வழிகாட்டுதலின் பேரில் விநாயகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவேலிக்கரா போலீசார் நடிகர் விநாயகன் மீது பெண்களை அவமதித்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்தாண்டு ஜூலையில் நடைபெற்ற சம்பவத்துக்காக இந்த வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஆழப்புழா மாவட்டத்தில் தாழக்கரா பகுதியை சேர்ந்தவர் மும்பையில் வேலை செய்து வருகிறார். 2025ல் விநாயகன் அமைச்சர் ஒருவரை விமர்சித்து முகநூலில் கவிதை ஒன்றை பதிவிடுகிறார். அது பலரையும் முகம்சுழிக்க வைக்கிறது. இந்தப் பதிவை எடுத்து விநாயகனுக்கு வாட்சப் வழியாக புகாரளித்தவர் உரையாடியிருக்கிறார். இந்த வாக்குவாதத்தை விநாயகன் தனது முகநூல் பக்கத்தில் ஸ்கிரீன்ஷாட் எடுத்து பதிவிடுகிறார். அதில் புகார்தாரரின் வாட்சப் டிபியில் அவரது 8 வயது மகளும் இருக்கிறார். அதில் மொபைல் எண்ணுடன் விநாயகன் பதிவிட்டதால் வழக்குப் பதியப்பட்டுள்ளது.