பார்த்திபனின் 'டீன்ஸ்' படத்திற்கு தடை கோரி வழக்கு

'டீன்ஸ்' திரைப்படத்திற்கு தடை கோரி சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பார்த்திபனின் 'டீன்ஸ்' படத்திற்கு தடை கோரி வழக்கு
Published on

கோவை,

பிரபல நடிகரும், இயக்குநருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன், டீன்ஸ் என்ற புதிய திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். கோவையை சேர்ந்த ரியல் வோர்க்ஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த சிவபிரசாத் என்பவர், டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான மேற்பார்வையாளராக இருந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 20 -ம் தேதிக்குள் படத்திற்கான கிராபிக்ஸ் காட்சிகளுக்கான அனைத்து பணிகளையும் முடித்துக் கொடுப்பதாக கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு கட்டணமாக சிவபிரசாத் 68 இலட்சத்து 54 ஆயிரத்து 400 ரூபாய் கேட்ட நிலையில், பார்த்திபன் 42 இலட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார். மேலும் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் பிப்ரவரி மாதத்திற்குள் முடித்துக் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்காத நிலையில் பார்த்திபன் ஏப்ரல் 19-ம் தேதி வரை கால நீட்டிப்பு கொடுத்துள்ளார்.

இருப்பினும் நான்கில் ஒரு பங்கு பணிகளை மட்டுமே முடித்த சிவப்பிரசாத், படத்தின் முக்கிய கிராபிக்ஸ் காட்சிகளை ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்க முடியாது எனக் கூறியிருக்கிறார். இதனிடையே சிவப்பிரசாத் கடந்த மாதம் நான்காம் தேதி கிராபிக்ஸ் கட்சிகளுக்கான கட்டணமாக 88 இலட்சத்து 38 ஆயிரத்து 120 ரூபாய் தொகை செலுத்த வேண்டும் என பார்த்திபனுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். ஒப்பந்தத்தை மீறி கூடுதலாக பணம் கேட்டதும், குறிப்பிட்ட தேதியில் பணிகளை முடித்துக் கொடுக்காததும் தெரியவந்துள்ளது. இவ்வாறான சூழலில் தன்னை ஏமாற்றியதாக பார்த்திபன் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சிவபிரசாத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பார்த்திபன் புகாருக்கு பதிலடியாக 'டீன்ஸ்' கிராபிக்ஸ் மேற்பார்வையாளராக பணியாற்றிய சிவ பிரசாத் தரப்பில் இருந்து டீன்ஸ் படத்துக்கு தடை கோரி சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தெடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தெடர்பாக பார்த்திபன் தரப்பினர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

படம் வரும் ஜூலை 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நாளில் தான் கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படமும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com