

சென்னை,
காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நிலையில் தமிழகத்தில் ஆளுங்கட்சி உள்பட பல்வேறு கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும் திரையுலகினரின் மவுன போராட்டம் இன்று காலை தொடங்கியது. இதில், நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர்கள் விஜய், சிவகுமார் மற்றும் சிவகார்த்திகேயன், ராஜேஷ், சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், நடிகை ஸ்ரீப்ரியா மற்றும் நடிகர் கார்த்தி உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர். தொடர்ந்து, நடிகர் சங்க தலைவர் நாசர் பேசும்பொழுது, சுயநலமற்று போராடி வரும் அனைவருக்கும் தமிழ் திரையுலகம் வணங்குகிறது. தமிழக அரசின் கோரிக்கைக்கு செவிசாய்த்து மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என கூறினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்பது பேராசை அல்ல. அது நமது உரிமை. காவிரிக்காக போராட்டம் நடத்துவது நமது கடமை. மக்களுக்கு கேடு விளைவிக்கும் திட்டங்களை அரசு செயல்படுத்த கூடாது.
திரையுலகம் பிரச்சினையில் சிக்கிக்கொண்டிருக்கும் வேளையிலும், மக்களுக்காக போராடுவது முக்கியம் என கருதியதால் போராட்டம் நடத்துகிறோம். காவிரி மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சினைக்காக இன்று மௌன அறவழி போராட்டம் நடத்தப்படுகிறது என கூறினார்.