

விதிகளுக்கு முரணாக இருந்தால் திரைப்படத்தின் தலைப்பை மாற்ற தணிக்கைக் குழு அறிவுறுத்தலாம் என புதிய வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியத் திரையுலகம் என்பது உலகின் மிகப் பெரிய பொழுதுபோக்குத் தொழிலில் ஒன்று. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் இங்கு வெளியாகின்றன. ஆனால், ஒரு திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து திரையரங்கிற்கு வரும் முன்பு, அது ஒரு முக்கியமான தேர்வை எதிர்கொள்ள வேண்டும். அதுதான் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம், மக்கள் மொழியில் ‘சென்சார் போர்டு’. வெறும் காட்சிகளை வெட்டுவது மட்டும்தான் இவர்களது வேலையா? இல்லை. இது ஒரு கலைப் படைப்பைச் சமூகத்திற்கு ஏற்றவாறு வகைப்படுத்தும் ஒரு மிகப் பெரிய அமைப்பு.
‘சென்சார் போர்டு’ என்பது இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பு. இதன் தலைமையகம் மும்பையில் உள்ளது.
வாரியத்தின் மிக உயர்ந்த பதவி. மத்திய அரசால் நியமிக்கப்படுபவர். பெரும்பாலும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் அல்லது கலை இலக்கியவாதிகள் இப்பொறுப்பில் இருப்பார்கள். தலைவரைத் தவிர, 12 முதல் 25 உறுப்பினர்கள் வரை இக்குழுவில் இருப்பார்கள். இவர்களும் மத்திய அரசால் நியமிக்கப்படுபவர்கள். கல்வி, கலை, சமூக சேவை, சட்டம் போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த வல்லுநர்கள் இதில் இடம் பெறுவார்கள்.
தணிக்கை வாரியம் எப்போதும் சர்ச்சைகளின் மையப்புள்ளியாகவே இருந்துள்ளது. படைப்புச் சுதந்திரத்திற்கும், கட்டுப்பாட்டிற்கும் நடக்கும் போராட்டம் இது.
சமீபத்தில் தணிக்கை வாரியத்தின் 18 பேர் கொண்ட புதிய குழு மாற்றி அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த கடுமையான புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் வெளியிட்டுள்ள புதிய அறிவுறுத்தல்களின்படி, திரைப்படங்களின் தலைப்புகளை ஆய்வு செய்யவும், தேவைப்பட்டால் அவற்றை மாற்றியமைக்கவும் தணிக்கை குழுவுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சினிமாடோகிராஃப் சட்டம் 1952 மற்றும் சினிமாடோகிராஃப் விதிகள் 2024 ஆகியவற்றின் கீழ் இந்த புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திரைப்படத் தணிக்கை வாரியம் தயாரிப்பாளர்களுக்காக வெளியிட்டுள்ள முக்கிய வழிகாட்டுதல்கள்
தயாரிப்பாளர்கள் தங்களின் திரைப்படங்களுக்கு வைக்கும் தலைப்புகள் தணிக்கை வாரியத்தில் பதிவு செய்யப்பட்டதாலேயே அவை இறுதியானவை என்று கருத முடியாது. விளம்பரங்கள், டீசர்கள் அல்லது டிரெய்லர்களில் பயன்படுத்தப்படும் தலைப்புகள் எதுவாக இருந்தாலும், தணிக்கைக் குழுவின் ஆய்வுக்கு உட்பட்டே இறுதி செய்யப்படும். விதிகளுக்கு முரணாக இருந்தால் தலைப்பை மாற்ற தணிக்கைக் குழு அறிவுறுத்தலாம்.
தற்காலிக பின்னணி இசை, முழுமையடையாத கிராபிக்ஸ் காட்சிகளுடன் இருக்கும் படங்களை தணிக்கைக்கு சமர்ப்பிக்கக் கூடாது. இறுதி செய்யப்பட்ட கிராபிக்ஸ், சவுண்ட் மிக்ஸிங், வசன வரிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் அம்சங்கள் ஆகியவற்றுடன் முழுமையாக முடிவடைந்த படங்களை மட்டுமே தணிக்கைக்கு அனுப்ப வேண்டும்
தயாரிப்பாளர்கள் தங்களின் பட ரிலீஸ் தேதியை முன்கூட்டியே அறிவித்துவிட்டார்கள் என்பதற்காக, தணிக்கை செய்யும் நடைமுறைகளை வாரியம் விரைவுபடுத்தாது. தணிக்கை வாரியத்தின் சட்டபூர்வமான காலக்கெடுவின்படியே படங்கள் சான்றிதழ் பெற முடியும். எனவே, தயாரிப்பாளர்கள் திட்டமிட்ட வெளியீட்டு தேதிக்கு பல நாட்களுக்கு முன்பே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
கடந்த காலங்களில் ‘ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா’, ‘மாத்ருபூமி’ போன்ற பல திரைப்படங்களின் தலைப்புகள் தணிக்கை வாரியத்தின் அறிவுறுத்தலால் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.