'மார்க் ஆண்டனி' படத்தை இந்தியில் வெளியிட லஞ்சம் கேட்ட விவகாரம்; நடிகர் விஷாலின் உதவியாளரிடம் சி.பி.ஐ. விசாரணை

‘மார்க் ஆண்டனி’ படத்தை இந்தியில் வெளியிட லஞ்சம் கேட்ட விவகாரம் தொடர்பாக நடிகர் விஷாலின் உதவியாளரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
'மார்க் ஆண்டனி' படத்தை இந்தியில் வெளியிட லஞ்சம் கேட்ட விவகாரம்; நடிகர் விஷாலின் உதவியாளரிடம் சி.பி.ஐ. விசாரணை
Published on

மும்பை,

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்த 'மார்க் ஆண்டனி' திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனிடையே இந்த படத்தின் இந்தி பதிப்பிற்காக மும்பை சென்சார் போர்டுக்கு ரூ.6.5 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்ததாக நடிகர் விஷால் புகார் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், 'மார்க் ஆண்டனி' படத்தை பார்க்கவே மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் ரூ.3 லட்சம் கேட்டதாகவும், சான்றிதழ் வழங்க ரூ.3.5 லட்சம் கேட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். மேனகா என்ற இடைத்தரகரிடம் மொத்தம் ரூ.6.5 லட்சம் ரூபாய் பணத்தை இரண்டு தவணைகளாக கொடுத்து 'மார்க் ஆண்டனி' படத்தை இந்தியில் வெளியிட்டேன் என நடிகர் விஷால் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த புகார் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் நடிகர் விஷால் அளித்த புகார் தொடர்பாக, மேனகா, ராமதாஸ் மற்றும் ராஜன் ஆகிய 3 இடைத்தரகர்கள் மற்றும் பெயர் குறிப்பிடாத சென்சார் போர்டு அதிகாரிகள் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் இந்த விவகாரத்தில் நடிகர் விஷாலின் உதவியாளர் ஹரிகிருஷ்ணன் என்பவர் மூலமாக தரகர்கள் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மும்பையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஹரிகிருஷ்ணனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com