

ஜான்வி கபூரின் டீப் பேக் வீடியோவை பிரபலப்படுத்தி, கோடிக்கணக்கான மக்கள் அதனை பார்க்க வைப்பதில்தான் பிரபலங்கள் வெற்றி பெற்றுள்ளதாக இயக்குநர் ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.
ஜூனியர் என் டிஆர் நடிப்பில் உருவான ‘தேவரா’ திரைப்படம், கடந்த 2024 ஆண்டில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், இப்படத்தில் இடம்பெற்ற சுட்டமல்லி பாடல் கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்று ஹிட் அடித்தது.
சுட்டமல்லி பாடலை ஏஐ மூலம் போலியாக சித்திரித்து உண்மையான பாடலில் இடம்பெறாத மோசமான ஆபாச காட்சிகளை உருவாக்கி சிலர் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதனால், ஜூனியர் என்டிஆர் உள்பட படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். அந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
ஜூனியர் என்டிஆர் அந்த அருவருப்பான வீடியோவை கடுமையாக கண்டித்ததுடன் இதற்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். அதன் பிறகு சிரஞ்சீவி, குஷ்பூ, விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட பலரும் அதை கண்டித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
இந்நிலையில், ஜான்வி கபூரின் டீப் பேக் வீடியோ விவகாரம் கையாளப்பட்ட விதம் பற்றிய தனது பார்வையை இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “பிரபலங்கள் அனைவரும் இணைந்து செய்த ஒரே காரியம், அந்தத் தவறான இணைப்பிற்கு விளம்பரம் கொடுத்து, கோடிக்கணக்கான மக்கள் அதனைப் பார்க்க வைத்ததுதான். அதைவிட, குற்றவாளியைப் பிடிப்பதில் கவனம் செலுத்தி, அதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருப்பதே புத்திசாலித்தனமாக இருந்திருக்கும். அதற்குப் பதிலாக, அவர்கள் டுவீட் செய்து, பாதிக்கப்பட்டவரின் அடையாளத்திற்கும் அந்தத் தவறான உள்ளடக்கத்திற்கும் மிகப்பெரிய கவனத்தைக் கொண்டுவந்து சேர்த்துள்ளனர். இதுவும் ஒரு குற்றமே” என்று ராம்கோபால் வர்மா குறிப்பிட்டுள்ளார்.