

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘சிங்கள் பசங்க’ என்ற நிகழ்ச்சியில் கூமாப்பட்டி தங்கப் பாண்டியன் உடன் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை சாந்தினி பிரகாஷ். இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘பூவே பூச்சூடவா’ என்ற தொடரில் நடித்து மக்கள் மனங்களைக் கவர்ந்தவர். இவருக்கு சமூக ஊடகங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது, சாந்தினி பிரகாஷ் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் -2’ தொடரில் சுகன்யா என்ற பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் பாகத்துக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகம் அண்ணன் தம்பி பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இரண்டாவது பாகம் அப்பா, மகன்களின் பிணைப்பை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. சாந்தினி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுற்றும் விழி சுடரே தொடரிலும் நடிக்கிறார்.
இந்த நிலையில், நடிகை சாந்தினி பிரகாஷ் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக இணைந்துள்ளார். அதற்கான உறுப்பினர் அட்டையும் பெற்றுள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சாந்தினி பகிர்ந்துள்ளார்.