மக்கள் மனங்களை வென்ற குணச்சித்திரங்கள் : செந்தாமரை

காஞ்சிபுரம் அருகே தியாகமுகச்சேரி என்ற கிராமத்தில் 13.4.1935 அன்று பிறந்தவர் செந்தாமரை. ஏழு வயதில் தந்தையை இழந்து, சித்தப்பாவின் அரவணைப்பில் வளர்ந்தவர். கவுசல்யா-செந்தாமரை தம்பதியினரின் சீர்திருத்தத் திருமணம் காஞ்சிபுரத்தில் நடந்தேறியது.
செந்தாமரை - ‘மூன்று முகம்’ படத்தில் ரஜினியுடன்..
செந்தாமரை - ‘மூன்று முகம்’ படத்தில் ரஜினியுடன்..
Published on

செந்தாமரை வசித்தது அறிஞர் அண்ணாவின் எதிர் வீடு என்பதால், அவருடைய அறிமுகமும் கரிசனமும் கிடைக்கப் பெற்றவர். அண்ணாவின் பரிந்துரையுடன் சென்னைக்கு வந்த செந்தாமரை, எம்.ஜி.ஆருடைய நாடகக்குழுவில் தானும் ஒரு நடிகரானார்.

பிறகு அங்கிருந்து சிவாஜி நாடகக்குழுவிலும் அங்கம் வகித்தார். தங்கப்பதக்கம் சினிமாவாகும் முன், இரண்டில் ஒன்று என்ற தலைப்பில் மகேந்திரன் எழுதி நாடகமாக நடத்தப்பட்டது. அப்போது அதன் நாயகன் வேடத்தில் முன்னூற்றுக்கும் அதிகமான முறை நடித்தவர் செந்தாமரை.

மிக அழகான பெயருக்குச் சொந்தக்காரரான செந்தாமரை, கம்பீரமான நடிகர். ஒரு நல்ல நடிகர் தனது முகம், பார்வை, குரல் என எல்லாவற்றாலும் நடிக்கத் தெரிந்தவராக இருத்தல் அவசியம்.

தன்னுடைய குரலைக் கொண்டு என்னவெல்லாம் மாயாஜாலம் செய்யமுடியும் என்பதற்கு, பல படங்களில் பிரமாதப்படுத்தியிருப்பார் செந்தாமரை. வில்லன் வேடத்திலேயே சின்னச் சின்ன வித்தியாசங்களை, ஒவ்வொரு படத்திலும் செய்து காட்டியது இவரது தனித்தன்மை.

பல படங்களில், பற்பல வேடங்களில் நடித்து, தன் திறமையினாலே தனக்கென்று தனியிடத்தை வந்தடைந்த மாபெரும் ஆளுமை செந்தாமரை. 1970-களின் இறுதி வரைக்கும், தனக்குக் கிட்டிய எந்த வேடமானாலும் அவற்றில் திறம்பட நடித்து நியாயம் செய்து வந்தார். தில்லானா மோகனாம்பாள் படம் அதற்கு ஒரு உதாரணம். அதில் சொற்ப நிமிடங்களே வந்து செல்லக்கூடிய மிராசுதாராகத் தோன்றும் செந்தாமரையின் குரலும், நெடிய வசனத்தை அவர் உச்சரித்த பாங்கும், என்றும் மறவாத சிறப்பான வேடமாக அதை அவர் மாற்றிக் கொண்டதற்கான சாட்சியம் சொல்லும்.

வில்லன் வேடங்களில் நடித்து வந்த ரஜினி, முதன்முதலில் நல்ல பாத்திரத்தில் ஸ்ரீதேவிக்கு அண்ணனாக கவிக்குயில் படத்தில் தோன்றினார். அந்தப் படத்தில் சின்னையா என்கிற முக்கிய பாத்திரம் ஏற்றவர் செந்தாமரை.

எண்பதுகளில் ரஜினிகாந்துக்கு கடுமையாக ஈடுகொடுத்தவர் அவரே. பொல்லாதவன், கழுகு, தனிக்காட்டு ராஜா, அடுத்த வாரிசு, நான் மகான் அல்ல, உன் கண்ணில் நீர் வழிந்தால், படிக்காதவன், நான் அடிமை இல்லை என ரஜினியின் அனேக படங்களில் அவருக்கென்று வேடம் இருந்தது.

அதிசயப் பிறவி படத்தில் தன் அண்ணன் மகன் பாலுவை, விஷம் கொடுத்துத் தீர்த்துக்கட்டி விடுவார் சித்தப்பா சின்னச்சாமி. எமலோகத்தில் நிகழும் கணக்கு குளறுபடியால் மறுபடியும் பிழைத்து பாலுவாக எழும் காளை ரஜினி, சித்தப்பா குடும்பத்தை செமை வாங்கு வாங்குவார்.

தன் சகல அதிகாரங்களையும் இழந்து சித்தப்பா செந்தாமரை, வீட்டின் தரையை மெழுகுவார். அந்தக் காட்சியில் தளர்ந்த குரலில் தனக்குத் தானே பேசி முனகிக் கொண்டு நடித்த செந்தாமரை, வேறு எந்தப் படத்திலும் தோற்று வித்திராத புதிய குரலால் அந்தக் காட்சியை ஒளிரச் செய்திருப்பார்.

செந்தாமரையின் பண்பட்ட நடிப்புக்கு இப்படியான நுட்பமான பல வேடங்கள் சாட்சியளிக்கும்.

மூன்று முகம் படத்தில் ரஜினிக்கு மூன்று வேடம். அதில் ஏகாம்பரம் மற்றும் ஆம்பர் என்ற இரு தோற்றங்களில் மிரட்டினார் செந்தாமரை. பிளாஷ்பேக்கில் படபடக்கும் போலீஸ் அதிகாரி அலெக்ஸ் பாண்டியனாக வரும் ரஜினியிடம், செல்லமாய் மிரட்டியபடி அறிமுகமாவார். அவரது சமரசங்கள் எதையும் ஏற்காமல் அடித்து அவரையே சிறைப்படுத்தும் அலெக்ஸ் பாண்டியனைக் கொலை செய்து வஞ்சம் தீர்ப்பார்.

தன் தோற்றத்தை மாற்றிக் கொண்டு ஆம்பர் என்ற பேரில் புதிய அவதாரத்தில் நடமாடுகிற அவரை, மகன் ரஜினி பழிதீர்ப்பதே மூன்று முகத்தின் கதை.

ஏகாம்பரமாகத் தன் நடை, உடை, பாவனை எல்லாவற்றிலும் மிளிரவே செய்தார் செந்தாமரை. எள்ளல் சிரிப்புடனான பார்வையைச் சட்டென்று குரூரமாக மாற்றிக் கொள்வதை அனாயாசமாக செய்திருப்பார். ரஜினியை எதிராடிய வில்லன் நடிகர்களின் பட்டியலைத் தயாரித்தால் ரஜினியின் ராசியான வில்லன் எனும் புகழுக்குரியவராக செந்தாமரையின் பெயர் அதில் இடம்பெறும்.

செந்தாமரையின் நடிப்புச் சரித்திரத்தில் உன்னதமான வேடம் தூறல் நின்னு போச்சு படத்தில் அவர் ஏற்ற பொன்னம்பலம் என்ற பாத்திரம். அந்த ஊரிலேயே மதிப்புக்குரிய மனிதர் அவர். சொல் மாறாத பண்பு கொண்ட குணவான்.

அவரது ஒரே மகளான மங்களத்தைப் பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை செல்லத்துரைக்கு, பெண்ணை மிகவும் பிடித்து விடுகிறது. அடுத்த கட்டப்பேச்சின் போது வரதட்சணை கணக்கில் முன் பின்னாக சொற்கள் தடித்ததில், கனம் தாளாமல் பேச்சு முறிந்துவிடுகிறது.

தன் வீட்டாருக்குத் தெரியாமல் வரதட்சணை தொகையைத் தான் தருவதாகவும், அதைக் கொண்டு திருமணத்தை நடத்தி வைக்குமாறும் பேச வருகிறார் செல்லத்துரை.

உன்னைப் பெத்தவங்க பேச்சுக்குத் தான் என்னைய பிச்சைக்காரன்னு சொன்னாங்க. நீ அப்படியே என்னைய ஆக்கிராத என்று கடிந்து கொண்டு அவரைத் திருப்பி அனுப்புகிறார், பொன்னம்பலம்.

அதன் பின்பும் செல்லத்துரையும் மங்களமும் சந்திப்பது தெரிந்து, தன் மனைவியிடமும் அம்மாவிடமும் கலங்குகிற காட்சியில் உன்னதமான நடிப்பால் கவர்ந்திருப்பார் செந்தாமரை.

அப்பா தன்னோடு பேசாமல் கோபத்தில் இருப்பதை நொந்து கொண்டு பொன்னம்பலத்தின் மகள் மங்களம், நெருப்பால் தன் காலை சுட்டுக் கொள்வார்.

அடுத்த தினம் முழுவதும் தகப்பனும் மகளும் சாப்பிடாமல் இருப்பதை வீட்டார் கண்டிக்க, தன் மகள் மீதான கோபம் தீர்ந்து அவள் படுத்திருக்கும் இடத்தை நோக்கிச் செல்லும் பொன்னம்பலம், அவளுடைய புண்பட்ட இரண்டு பாதங்களையும் தன் கைகளால் ஏந்திக் கொண்டு கதறியபடி அவளை அணைத்துக் கொள்வார்.

ஆயிரம் சொற்களைப் பேசி அங்கே இருவரும் சமாதானமடைவதைக் காட்சிப்படுத்துவதை விட, கலங்கும் தகப்பனின் கண்ணீர்த் துளிகள் வலுவானவை என்பதை உணர்த்தி இருப்பார் செந்தாமரை.

நல்ல மற்றும் வில்ல பாத்திரங்கள் பலவற்றில் நடித்த செந்தாமரை, தனக்குக் கிடைத்த அத்தனை வேடங்களின் வழியாகவும் நுட்பமாக வித்தியாசத்தை வெளிப்படுத்தி நடித்து மிளிர்ந்ததை யாராலும் மறுக்க முடியாது.

1992-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந் தேதி, தனது 57-வது வயதில் சென்னையில் காலமான, நடிகர் செந்தாமரையின் புகழ் திரையுள்ள வரை நிலைத்திருக்கும்.

-குணச்சித்திரங்கள் வருவார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com