

ஐதராபாத்
தெலுங்கு பட உலகைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோருக்கு போதை பொருட்கள் சப்ளை செய்ததாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கெல்வின், ஐதராபாத்தை சேர்ந்த பியூஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் போதைப்பொருள் கும்பலுடன் தெலுங்கு நடிகர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. விசாரணையில் நடிகர்கள் நவ்தீப், தருண், தனிஷ், நந்து, நடிகைகள் சார்மி, முமைத்கான், இயக்குனர் பூரி ஜெகன்னாத், ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே.நாயுடு உள்ளிட்ட 12 பேருக்கு முகாந்திரம் இருப்பதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியது. வழக்குகுறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது.
இது தொடர்பான விசாரணைக்காக நடிகை சார்மி நேற்று விசாரணை குழு முன்னிலையில் ஆஜரானார்.
அப்போது, அவரை ஸ்ரீனிவாஸ் என்ற போலீஸ் ஒருவர் தொட்டது மட்டுமல்லாமல் பிடித்து தள்ளியதாக குற்றம்சாட்டியுள்ளார்.
நான் விசாரணைக்காக வரும்போது அங்கு அதிகம் பேர் நின்றிருந்தார்கள், அவர்களை கடந்து செல்வதில் எனக்கு மிகவும் சிரமம் இருந்தது. அங்கு அதிக பெண் போலீஸ் இருந்தும், ஆண் போலீசான ஸ்ரீனிவாஸ் எனக்கு பாதுகாப்பு தருகிறேன் என்ற பெயரில் என்னை தொட்டு தள்ளியுள்ளார், எனவே அவர் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.