மோசடி வழக்கு: லதா ரஜினிகாந்திற்கு நிபந்தனை முன்ஜாமீன்

மீடியா ஒன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் வாங்கிய கடனுக்காக லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்து கையெழுத்திட்டிருந்தார்.
மோசடி வழக்கு: லதா ரஜினிகாந்திற்கு நிபந்தனை முன்ஜாமீன்
Published on

பெங்களூரு, 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'கோச்சடையான்' திரைப்படம், 2014-ம் ஆண்டு வெளியானது. மிகப்பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம், பெரியளவில் வசூலை ஈட்டவில்லை. இந்த திரைப்படத்தை தயாரிப்பதற்காக ஆட்-ப்யூரோ நிறுவனத்திடம் இருந்து மீடியா ஒன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம், ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்தது. அதற்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்து கையெழுத்திட்டார்.

இந்த நிலையில், கடனாக பெற்ற பணத்தை மீடியா ஒன் நிறுவனத்தின் உரிமையாளர் முரளி திருப்பி தரவில்லை என கூறி, ஆட்-ப்யூரோ நிறுவனம், பெங்களூரு முதன்மை கோர்ட்டில் 2015-ம் ஆண்டு மோசடி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் முரளி, லதா ரஜினிகாந்த் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதை ரத்து செய்யக்கோரி, கர்நாடக ஐகோர்ட்டில் லதா ரஜினிகாந்த் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு 3 பிரிவுகளை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், ஆதாரங்களை திரித்து தாக்கல் செய்த பிரிவுகளின்கீழ் வழக்கின் விசாரணையை மேற்கொள்ளலாம் என்று பெங்களூரு முதன்மை கோர்ட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், கர்நாடக ஐகோர்ட்டு 3 பிரிவுகளை ரத்து செய்ததற்கு எதிராக ஆட்-ப்யூரோ நிறுவனமும், பெங்களூரு கோர்ட்டு விசாரணைக்கு எதிராக லதா ரஜினிகாந்தும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.

இந்த 2 மனுக்களையும் விசாரணைக்கு ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, லதா ரஜினிகாந்த் வழக்கு தொடர்பாக, பெங்களூரு கோர்ட்டு மீண்டும் விசாரணை நடத்த கடந்த அக்டோபர் மாதம் அனுமதி அளித்திருந்தது.

இந்த நிலையில் இன்று பெங்களூரு கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணைக்கு லதா ரஜினிகாந்த நேரில் ஆஜரானார். இதனை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் எனக்கூறி அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை ஜனவரி 6-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com