விக்ரமின் “துருவ நட்சத்திரம்” படத்தை வெளியிட மீண்டும் அவகாசத்தை நீட்டித்த ஐகோர்ட்

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் வெளியாகாமலேயே பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.
விக்ரமின்  “துருவ நட்சத்திரம்” படத்தை வெளியிட மீண்டும் அவகாசத்தை  நீட்டித்த ஐகோர்ட்
Published on

‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் வெளியிடுவதற்கான காலக்கெடுவை அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டித்து தற்போது சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

9 ஆண்டுகளாக தாமதமாகும் ‘துருவ நட்சத்திரம்’

நடிகர் விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக உருவாகி வரும் படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்துள்ள இந்த படத்தில் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு, 2018-ஆம் ஆண்டிலேயே வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக படம் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டதால், கவுதம் மேனன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

திட்டமிட்டபடி படத்தை வெளியிட முடியவில்லை

கடந்த ஏப்ரல் 30, 2026 அன்று இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிதிச் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, படக்குழுவினர் ‘கொண்டாடுவோம் என்டர்டெய்ன்மென்ட்’ என்ற பெயரில் பிரத்யேக வங்கிக் கணக்கைத் தொடங்கி, படத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் கடன்தாரர்களுக்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், ஜூன் 15, 2026-க்குள் படத்தை வெளியிட அனுமதி அளிக்கப்பட்டது. குறிப்பிட்ட தேதிக்குள் படத்தை வெளியிட முடியாவிட்டால், கூடுதல் அவகாசம் கோரி நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் ஜூன் 15 ஆம் தேதிக்குள் படத்தை வெளியிட இயலாததால், படத்தை வெளியிடுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, படத்தை வெளியிடுவதற்கான கால அவகாசத்தை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டிருந்தார். ஆனால் திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை.

திரைப்படத்தை வெளியிட காலக்கெடு நீட்டிப்பு

இந்நிலையில், ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் வெளியிடுவதற்கான காலக்கெடுவை அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டித்து தற்போது சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கவுதம் மேனன் மனுவை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஆதார ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவு

தனது மனுவில், படத்தை வெளியிட முதலீட்டாளர் ஒருவரை இறுதி செய்துள்ளோம் என்றும் கவுதம் வாசுதேவ மேனன் தரப்பு கூறியிருக்கிறது. அதேநேரம் வழக்கின் விசாரணையின் போது ரூபாய் 10.57 கோடி தொகை நடிகர் விக்ரமுக்கு வழங்கப்பட்டதற்கான உறுதிப்படுத்தல் ஆவணம் இல்லை எனக் கூறிய நீதிபதி, 10.57 கோடி வழங்கப்பட்டதற்கான ஆதார ஆவணங்களை நீதிமன்றம் நியமித்த மேற்பார்வையாளர்கள் முன்பு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

கடந்த 9 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம், இந்த அக்டோபர் மாதமாவது திரையரங்குகளுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com