“துரந்தர் 2” திரைப்படத்துக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்

தேர்தல் நடத்தை அமலில் உள்ளதால் ‘துரந்தர் 2’ படத்தை தமிழ்நாட்டில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
“துரந்தர் 2” திரைப்படத்துக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்
Published on

சென்னை,

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் ‘துரந்தர்’. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது. அதனை தொடர்ந்து, துரந்தர் படத்தின் 2 ஆம் பாகமாக ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ திரைப்படம் கடந்த 19ம் தேதி வெளியானது. இந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றும், வசூல் சாதனை படைத்தும் வருகிறது.

‘துரந்தர் 2’ திரைப்படத்தை தமிழக திரையரங்குகளில் நிறுத்தி வைக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த டி.ராகேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தேர்தல் நடத்தை விதிகள் கடந்த மார்ச் 15-ந்தேதி முதல் அமலில் உள்ள நிலையில் இப்படத்தில் அரசியல் தொடர்பாக ஒரு சார்பான கருத்துகள் இருப்பதால் துரந்தர் 2 திரைப்படத்தை தமிழக திரையரங்குகளில் தற்போதைய நிலையில் திரையிட தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.தேர்தலுக்கு பின் ‘துரந்தர் 2’ திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட அனுமதிக்கலாம் எனவும் தெரிவித்து உள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி அருள் முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில், தமிழகத்திலும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு கொள்கைகளை இப்படம் பாராட்டும் வகையில் உள்ளதால் இத்திரைப்படம் திரையிட்டிருப்பது, நடைமுறையில் உள்ள தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று வாதிடப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை முன் வைப்பதாகவும், திரைப்படத்தின் எந்தப் பகுதிகள் தேர்தல் நடத்தை விதிகளை மீறுகின்றன என்பதைக் குறிப்பிடவில்லை எனவும் தெரிவித்தனர். மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் வழங்கிய சான்றிதழை மனுதாரர் எதிர்க்கவில்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com