நடிகர் பார்த்திபனுக்கு “ஜாதி - மதமற்றவர்” சான்றிதழ் வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

நடிகர் பார்த்திபனுக்கு ‘ஜாதி - மதமற்றவர்’ சான்றிதழை ஒரு வாரத்தில் வழங்குமாறு சோழிங்கநல்லூர் வட்டாட்சியருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் பார்த்திபனுக்கு “ஜாதி - மதமற்றவர்” சான்றிதழ் வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
Published on

சமீபத்தில் ஐதராபத்தில் நடைபெற்ற பட நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பார்த்திபன் தனது சாதி பற்றி பேசியது கடும் விம்ர்சனங்களை ஏற்படுத்தியது. தான், ஒரு நாயுடு பையன் சென்னையில் பிறந்து வளர்ந்ததால் எனக்கு தெலுங்கு அவ்வளவாக வராது’என்று பார்த்திபன் பேசியிருந்தார். தனது பேச்சு விமர்சனத்திற்குள்ளான நிலையில், பார்த்திபன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டு இருந்தார்.

சாதியை தலைமேல் வைத்துக் கொண்டாடுபவர்களை எனக்கே பிடிக்காது ‘இவன்’ உட்பட பல படங்களில்/இடங்களில் நானே அதை வன்மையாக கண்டித்துள்ளேன். அப்படியிருக்க நானே அதைச் செய்வேனா? தவறு நடந்து விட்டது என்பதை முழுமையாக உணர்ந்து வருந்தி கிடக்கிறேன். இவ்வளவு பேர் வருத்தத்திற்கு நான் ஆளாகி இருப்பது எனக்கே பிடிக்கவில்லை. என் திறமையை மட்டுமே நம்புவேனேத் தவிர, தவறியும் ஜாதியை சொல்லி வயிறு வளர்க்க எனக்கு விரும்புவனல்ல. இனி ஒரு முறை கூட தவறியும் இது நடக்காது என உறுதியளிக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

சமீபத்தில் சாதி, மதமற்றவன் என்ற சான்றிதழை பெற முயன்று வருவதாக பார்த்திபன் கூறியிருந்தார்.

சென்னை ஐகோர்ட்டில் பார்த்திபன் தாக்கல் செய்த மனுவில், 1958ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி பிறந்த தனக்கு பிறப்பு சான்று இல்லை எனவும், பழைய எஸ்.எஸ்.எல்.சி படிப்பை முடித்த பின் சான்றுகளைப் பெறவில்லை எனவும், தனது ஜாதி, மதத்தை தெரிவிக்கும் பிறப்பு சான்றோ, கல்விச் சான்றுகளோ தன்னிடம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜாதி, மதம், மொழி அடிப்படையிலான பிளவுகள், தேச ஒற்றுமைக்கு பாதிப்பானது என்பதால், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ, ஜாதி - மதமற்றவர் என சான்று கோரி வேளச்சேரி வட்டாட்சியருக்கு விண்ணப்பித்ததாகவும், அந்த விண்ணப்பம், சோழிங்கநல்லூர் வட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பணிகள் காரணமாக தனது விண்ணப்பத்தை பரிசீலிக்க இயலவில்லை என வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்து வருவதால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தனது விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஒரு வாரத்தில் நடிகர் பார்த்திபனுக்கு ‘ஜாதி - மதமற்றவர்’ என்ற சான்றிதழ் வழங்குமாறு சோழிங்கநல்லூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். மேலும், இதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில், நடிகர் பார்த்திபனுக்கு “ஜாதி - மதமற்றவர்” சான்றிதழ் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “இந்த சமூக விழிப்புணர்வு நல்மாற்றதை முன்னெடுக்கும் என் நல்லெண்ணத்தை வாழ்த்திப் பாராட்டும் அனைவருக்கும் நன்றி ! அரசின் வேலை வாய்ப்புகள் , அரசின் சலுகைகள் மூலம் சமுதாயத்திற்கு தேவையான நற்பலன்கள் பலருக்கும் கிடைப்பதனால் ஏற்றத் தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும். என் போன்ற சிலருக்குத் அச்சலுகைகள் தேவைபடாமல் இருக்கலாம் . அப்படிப் பட்டவர்கள் இச்சலுகைகளிலிருந்து ஒதுங்கிக் கொள்வதனால், அச்சலுகைகள் தேவைபடுவோருக்கு இன்னும் கூடுதலாகக் கிடைக்க ஏதுவாகும் . எனவே தேவைப்படாதவர்கள் மட்டும் இந்த சாதி மதமற்றவர் சான்றிதழை பெற முன்வருகையில் என் முயற்சியின் மூலம் ஒரு G O (Government Order) pass ஆவது பெரியளவில் பயனளிக்கும். நல்லதை மட்டுமே வரவில் வைப்போம், ” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com