

மலையாள படமான பட்டம் போலே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தொடர்ந்து, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் 'பேட்ட', 'மாஸ்டர்' 'மாறன்' மற்றும் சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். பிரபாஸ் ஜோடியாக 'தி ராஜாசாப்' படத்திலும், கார்த்தி ஜோடியாக 'சர்தார்-2' படத்திலும் மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக 'ஹிருதயபூர்வம்' படத்தில் நடித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் மாளவிகா மோகனன், தற்போது விஜய் சேதுபதி ஜோடியாக 'பாக்கெட் நாவல்' படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர மலையாளம், தெலுங்கிலும் பிசியாக உள்ளார்.
நடிகை மாளவிகா மோகனன் விழாவிற்கு சென்னை வந்திருந்தார். இதில், கலந்து கொண்டு பேசிய மாளவிகா மோகனன் “சென்னை எனக்கு எப்போதும் இரண்டாவது வீடு போன்றது. பிட்னஸ் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் எனக்கு அதிக ஈடுபாடு உண்டு.தமிழில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் ஒரு படத்திலும், நடிகர் கார்த்தியுடன் 'சர்தார் 2' படத்திலும் நடித்து வருகிறேன்” என்றார்.
அப்போது செய்தியாளர்கள். புதிதாக அமைந்துள்ள விஜய் அரசு இப்போது எப்படி இருக்கிறது? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த மாளவிகா, “விஜய் என்னுடைய நெருங்கிய நண்பர், அது அவருடைய நீண்ட நாள் கனவு என்பதை நான் அறிவேன். அவர் இவ்வளவு பெரிய வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
நடிகை மாளவிகா மோகனன் விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். அந்த படத்தின் மூலம் இவர்களின் கூட்டணி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் விஜய் நடித்த விதமும், மாளவிகா மோகனனின் நடிப்பும் ரசிகர்களை கவர்ந்தது.