

சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகிய ‘ஜனநாயகன்’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் நரேன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
தணிக்கைப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் இருந்து மீண்டு இன்று(23-ந்தேதி) ‘ஜனநாயகன்’ உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படம், விஜய்யின் திரைப்பயணத்தின் இறுதித் திரைப்படம் எனக் கூறப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் சுமார் 3,500 திரையரங்குகளில் ‘ஜனநாயகன்’ திரையிடப்படுகிறது.
இந்த படத்தை கொண்டாடுவதற்காக விஜய் ரசிகர்களும், த.வெ.க. கொண்டர்களும் நேற்று இரவு முதலே ஆட்டம் பாட்டத்தை தொடங்கியதால் திரையரங்குகள் திருவிழாக் கோலம் பூண்டுள்ளன. சென்னையில் உள்ள முக்கிய திரையரங்குகள் அனைத்தும் பிரமாண்ட கட்-அவுட்கள், வண்ணமயமான பேனர்கள், மலர் மற்றும் மின்னொளி அலங்காரங்களால் ஜொலித்தன. விஜய்யின் கட்-அவுட்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்து, மலர் தூவி, இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேளதாளங்கள், பட்டாசுகள், ஆட்டம்-பாட்டம் என திரையரங்குகள் முன்பு கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.
தமிழ்நாட்டை தாண்டி கர்நாடக மாநிலம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டை விஜய் ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், கர்நாடக மாநிலத்தில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் அதிகாலை 6 மணிக்கு ரிலீஸ் ஆகியுள்ளது. ரசிகர்கள் உற்சாகமாக திரையரங்குகளில் திரண்டு முதல் நாள் முதல் காட்சியை பார்த்து வருகின்றனர்.
தமிழகத்தில் காலை 9 மணிக்கு ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் முதல் காட்சி வெளியாக உள்ளது. சுமார் 7 மாதங்களாக இந்த படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள், இன்று முதல் காட்சிக்காக அதிகாலையிலேயே திரையரங்குகளுக்கு படையெடுத்துள்ளனர். விஜய்யின் இறுதி திரைப்படம் என்பதால், படம் திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.