

சென்னை,
லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான சண்டைக்கோழி 2 படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அஸ்வந்த் அசோக்குமார். இவரது சிறப்பான நடிப்பினால் சூப்பர் டீலக்ஸ், மை டியர் பூதம், ஐரா உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றார்.
இந்த நிலையில், குழந்தை நட்சத்திரம் அஸ்வந்த் தமிழக அரசு திரைப்பட விருது தனக்கு கிடைக்காத விரக்தியில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த விடியோ இணையத்தில் வைரலான நிலையில், தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் இந்தச் சிறுவனுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
அஸ்வந்த் அசோக்குமார் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, “தமிழக அரசின் மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தன் பெயர் இடம்பெறும் என நம்பிக்கையுடன் இருந்தேன், ஆனால் விருதுப் பட்டியலில் தன் பெயர் இடம்பெறவில்லை.
2019-ல் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ராசுக்குட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அந்த நடிப்பிற்காக நிச்சயமாக மாநில விருது கிடைக்கும் என நம்பினேன். ஆனால் அந்தப் படத்திற்கே விருது கிடைக்கவில்லை
சரி, 2022-ல் வெளியான ‘மைடியர் பூதம்’ படத்திற்காவது விருது கிடைக்கும் என மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருந்தேன். அதிலும் விருது கிடைக்கவில்லை. தேர்வுக்குழுவினர் இந்த மாதிரியான படங்களை பார்க்கிறார்களா என்பதே தெரியவில்லை.
ஒரு கலைஞன் நடிப்பது எதற்காக? அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால் நடிப்பதே வீண்தானே? ஏன் இப்படிப்பட்ட அநியாயம் செய்கிறார்கள் என்பது புரியவே இல்லை” என வருத்தத்துடன் விடியோ வெளியிட்டுள்ளார்.