

சென்னை,
கிராமத்து பின்னணியில், வி.ஏ.ஓ. அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்வுகளை இயல்பாகவும் நகைச்சுவை கலந்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
லட்சுமி அம்மாள் பிலிம்ஸ் சார்பில் செந்தில்முருகன் தயாரிப்பில், பாலு நாராயணன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் 'சிட்டா'. இப்படத்தில் சிபி கதாநாயகனாகவும், ஆராத்யா சாய் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் ஆதியா பிரசாத், பாலசரவணன், மூர்த்தி, மதுமிதா, அருவி மதன், செந்தில்முருகன், சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வாசுதேவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். டி.சி. இசையமைத்துள்ளார்.
படம் குறித்து இயக்குநர் பாலு நாராயணன் கூறியதாவது: “நம் நாட்டின் நிர்வாக அமைப்பில் கிராம நிர்வாக அலுவலகம் (வி.ஏ.ஓ.) முக்கியப் பங்கு வகிக்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு விவரங்கள் இந்த அலுவலகத்தின் மூலம் பதிவு செய்யப்படுகின்றன. எனவே, கிராம நிர்வாகம் சீர்குலைந்தால், அது மாநிலத்தின் நிர்வாகத்தையும் பாதிக்கும் என்ற கருத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ளோம்.
கிராமத்து பின்னணியில், வி.ஏ.ஓ. அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்வுகளை இயல்பாகவும் நகைச்சுவை கலந்தும் படமாக்கியுள்ளோம். நிலத்துக்குப் பட்டா, சிட்டா பெறுவதற்காக ஒரு சாதாரண மனிதர் சந்திக்கும் துயரங்களே இப்படத்தின் கதைக்களம்” என்றார்.
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டார்.