புற்றுநோயுடன் போராடும் 'சொக்கத் தங்கம்' பட நடிகை.. விரைவில் குணமடைவேன் என நம்பிக்கை!

நடிகை உமா சங்கரி மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

புற்றுநோயுடன் போராடும் 'சொக்கத் தங்கம்' பட நடிகை.. விரைவில் குணமடைவேன் என நம்பிக்கை!
Published on

சென்னை,

'கோவை பிரதர்ஸ்', 'தென்றல்', 'சூரி', 'கடல் பூக்கள்' உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை உமா சங்கரி. குறிப்பாக, கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான 'சொக்கத் தங்கம்' திரைப்படத்தில் விஜயகாந்தின் தங்கையாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றார். தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

2006-ஆம் ஆண்டு துஷ்யத் என்பவரை திருமணம் செய்து கொண்ட உமா சங்கரி, அதன் பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார்.

மார்பகப் புற்றுநோயால் பாதிப்பு

இந்த நிலையில், நடிகை உமா சங்கரி மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தற்போது அவர் புற்றுநோய்க்கான 2-வது கட்ட கீமோதெரபி மற்றும் இம்யூனோதெரபி சிகிச்சைகளை பெற்று வருகிறார்.

"நம்பிக்கையுடன் போராடி வருகிறேன்"

தனது உடல்நிலை குறித்து பேசிய உமா சங்கரி, "சவாலான நாட்களையும் நம்பிக்கையுடன் எதிர்கொண்டு வருகிறேன். என் மீது அன்பும் ஆதரவும் காட்டி வரும் ரசிகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. விரைவில் முழுமையாக குணமடைந்து மீண்டு வருவேன்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

உமா சங்கரியின் உடல்நிலை குறித்த தகவல் வெளியாகியதைத் தொடர்ந்து, அவர் விரைவில் முழுமையாக குணமடைய வேண்டும் என ரசிகர்கள் விருப்பத்தை தெரிவித்து வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com