“தி ஒடிஸி” படத்தின் சிறப்பு காட்சி திரையிடல்... இந்தியா வந்தடைந்த கிறிஸ்டோபர் நோலன்

இந்தியாவில் முதல் முறையாக நோலனின் ‘தி ஒடிஸி’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட உள்ளது.
“தி ஒடிஸி” படத்தின் சிறப்பு காட்சி திரையிடல்... இந்தியா வந்தடைந்த கிறிஸ்டோபர் நோலன்
Published on

உலகப் புகழ் பெற்ற ‘பேட்மேன்: தி டார்க் நைட்’, ‘இன்டர்ஸ்டெல்லார்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். இவரது திரைப்படங்கள் சுவாரஸ்சியமான, அதே சமயம் தலையை சுற்ற வைக்கும் திரைக்கதைக்கு பெயர் பெற்றவையாகும். குறிப்பாக ‘இன்செப்ஷன்’, ‘தி பிரெஸ்டீஜ்’ உள்ளிட்ட படங்களின் திரைக்கதைகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படம் 7 ஆஸ்கார் விருதுகளை அள்ளியது. தனது படங்களில், ரசிகர்களுக்கு துல்லியமான காட்சி அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக ‘ஐமேக்ஸ்’ கேமராவை நோலன் அதிகமாக பயன்படுத்துகிறார். மேலும், கிராபிக்ஸ் காட்சிகளை முடிந்த அளவு குறைவாக பயன்படுத்தி, காட்சிகளை தத்ரூபமாக படம்பிடிப்பதில் நோலன் அதிக முனைப்பு காட்டுகிறார்.

கிறிஸ்டோபர் நோலன் தனது 13-வது படமாக ‘தி ஒடிசி’ (The Odyssey) என்ற படத்தை இயக்கியுள்ளார். கவிஞர் ஹோமரின் கிரேக்க புராண காவியத்தை மையப்படுத்தி இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. பெரும்பாலும் அறிவியல் புனைவு கதைகளை தேர்வு செய்யும் கிறிஸ்டோபர் நோலன், முதல் முறையாக புராண கதையை படமாக எடுத்துள்ளார் என்பதால் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அதே சமயம், இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்து சிலர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஹாலிவுட்டில் சமீப காலமாகவே பல திரைப்படங்கள் ‘வோக்’(Woke) கலாசாரம் வலிந்து திணிக்கப்படுவதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அதாவது கதைக்கு தேவைப்படாவிட்டாலும் சமூக நீதி, பன்முகத்தன்மை, பாலின சமத்துவம், தன்பாலின ஈர்ப்பு உள்ளிட்ட கருத்துகள் பல திரைப்படங்களில் இடம்பெறுவதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில், கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிசி’ திரைப்படமும் இந்த விமர்சனத்திற்கு இலக்காகியுள்ளது. ‘ஹெலன்’ கதாபாத்திரத்தில் நடிகை லூபிடா நியாங்கோ நடித்துள்ள தகவல் சில ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

புராண கதையில் வரும் ‘ஹெலன்’ என்ற பெண், ஒரு பேரழகியாக வர்ணிக்கப்படுகிறார். மெனலஸ் என்ற மன்னனின் மனைவியான ஹெலன், டிராய் இளவரசன் மீது காதல் கொண்டு அவருடன் சென்றதன் விளைவாகவே மாபெரும் டிரோஜன் போர் நிகழ்வதாக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய கதாபாத்திரத்தில் கருப்பினத்தை சேர்ந்த ஒரு நடிகையை நடிக்க வைப்பதா? என்ற கேள்வியை சிலர் எழுப்பியுள்ளனர்.

விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், நோலனின் படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு மட்டும் குறையவே இல்லை. ஐமேக்ஸ் புக்கிங் ஆரம்பித்த உடனேயே ‘தி ஒடிசி’ திரைப்படத்திற்கான டிக்கெட்டுகள் அசுர வேகத்தில் விற்றுத்தீர்ந்தன. குறிப்பாக இந்தியாவில் ‘தி ஒடிசி’ திரைப்படம், ஹாலிவுட் படங்களுக்கான முன்பதிவில் சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில், இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் ‘தி ஒடிசி’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலுக்காக இந்தியா வந்துள்ளார். அவருடன் அவரது மனைவியும், தயாரிப்பாளருமான எம்மா தாமஸ், நடிகர் டாம் ஹாலண்ட்ஆகியோரும் இந்தியா வந்துள்ளனர்.

இந்தியாவில் முதல் முறையாக கிறிஸ்டோபர் நோலன் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட உள்ளது. இத்திரைப்படம் வரும் ஜூலை 17-தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com