

கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘ஒடிசி’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் நாளை வெளியாகிறது.
உலகப் புகழ் பெற்ற ‘பேட்மேன்: தி டார்க் நைட்’, ‘இன்டர்ஸ்டெல்லார்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். இவரது திரைப்படங்கள் சுவாரஸ்சியமான, அதே சமயம் தலையை சுற்ற வைக்கும் திரைக்கதைக்கு பெயர் பெற்றவையாகும். குறிப்பாக ‘இன்செப்ஷன்’, ‘தி பிரெஸ்டீஜ்’ உள்ளிட்ட படங்களின் திரைக்கதைகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படம் 7 ஆஸ்கார் விருதுகளை அள்ளியது. தனது படங்களில், ரசிகர்களுக்கு துல்லியமான காட்சி அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக ‘ஐமேக்ஸ்’ கேமராவை நோலன் அதிகமாக பயன்படுத்துகிறார். மேலும், கிராபிக்ஸ் காட்சிகளை முடிந்த அளவு குறைவாக பயன்படுத்தி, காட்சிகளை தத்ரூபமாக படம்பிடிப்பதில் நோலன் அதிக முனைப்பு காட்டுகிறார்.
கிறிஸ்டோபர் நோலன் தனது 13-வது படமாக ‘தி ஒடிசி’ (The Odyssey) என்ற படத்தை இயக்கியுள்ளார். கவிஞர் ஹோமரின் கிரேக்க புராண காவியத்தை மையப்படுத்தி இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. பெரும்பாலும் அறிவியல் புனைவு கதைகளை தேர்வு செய்யும் கிறிஸ்டோபர் நோலன், முதல் முறையாக புராண கதையை படமாக எடுத்துள்ளார் என்பதால் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. ‘தி ஒடிசி’ படம் ஜூலை 17 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
முழுக்க முழுக்க ஐமேக்ஸ் கேமராவில் எடுக்கப்பட்ட இப்படத்தின் சிறப்பு திரையிடலை மும்பையில் கண்ட பலரும் பாராட்டி வருகின்றனர். உலகளவிலுள்ள பல ஐமேக்ஸ் திரைகளில் இதனைக் காண ரசிகர்கள் காத்திருப்பதால் ஒடிசி பெரிய வணிகத்தைச் செய்யலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ‘தி ஒடிசி’ படத்தின் மேக்கிங் வீடியோவை நாளை (ஜூலை 14) ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.