ஒரு வருடம் முன்பே தொடங்கிய முன்பதிவு; முன்பதிவில் அசத்தும் "தி ஒடிஸி"

கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் 'தி ஒடிஸி'' படம் 2026ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி வெளியாக உள்ளது.
`இன்டர்ஸ்டெல்லர்', `இன்செப்ஷன்', `டெனட்' போன்ற திரைப்படங்கள் எடுத்துப் பிரபலமானவர் ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். `தி டார்க் நைட் டிரைலாஜி', `தி பிரஸ்டீஜ்' போன்ற படங்களையும் இயக்கி பெயர் பெற்றவர், டிஜிட்டல் தொழில்நுட்பம், 3டி தொழில்நுட்பம் மற்றும் அதீத கிராபிக்ஸ் காட்சிகள் போன்றவற்றைப் பெரிதும் விரும்பாதவர்.
கடைசியாக அமெரிக்காவின் முதல் அணுசக்தி ஆயுதத்தை உருவாக்கிய அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானி ஜே. ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து 'ஓப்பன்ஹெய்மர்' படத்தை இயக்கினார். இப்படம் 96வது ஆஸ்கர் விருதில் 7 விருதுகளை வென்றது.
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் 2026ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் 'தி ஒடிஸி'. மெட் டாமன் ஹீரோவாக இந்தப் படத்தில் நடிக்கிறார். இந்தப் படம் வெளியாக கிட்டத்தட்ட ஒரு வருடம் இருக்கும் நிலையில் அதன் டிக்கெட்டுகள் இப்போதே விற்று தீர்ந்திருக்கின்றன.
ஐமேக்ஸ் திரைகளுக்கான டிக்கெட்டுகள் நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ மற்றும் லண்டன் போன்ற நகரங்களில் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட சில நிமிடங்களிலே பெருவாரியான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. ஐமேக்ஸ் திரைகளை தவிர்த்து மற்ற திரையரங்குகளுக்கான டிக்கெட்டுகள் அமெரிக்கா மற்றும் கனடாவில் குறிப்பிட்ட சில பகுதிகளில் படத்தின் டிக்கெட் விற்பனை தொடங்கி அங்கேயும் சில நிமிடங்களில் பெருவாரியான டிக்கெட்டுகள் விற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்திருக்கிறது. படம் வெளியாக ஒரு வருடம் இருக்கும் நிலையில் இப்போதே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.






