முதல்-அமைச்சர் விஜய் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட சினிமா பிரபலங்கள்

நடிகை திரிஷா, 'ஜனநாயகன்' படத்தின் தயாரிப்பாளர், ஜெய், சங்கீதா, பாடகர் கிரிஷ் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் முதல்-அமைச்சர் விஜய் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர்.
முதல்-அமைச்சர் விஜய் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட சினிமா பிரபலங்கள்
Published on

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வென்ற தவெக, தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அமைத்துள்ளது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவளித்ததை அடுத்து, இன்று தவெக தலைவர் விஜய் முதல்வராகப் பதவியேற்றார்.

அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், திரைத்துறையைச் சேர்ந்த பல முக்கியப் பிரபலங்கள் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த விழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை திரிஷா. விஜய்யுடன் கில்லி, திருப்பாச்சி, லியோ உள்ளிட்ட ஐந்து வெற்றி படங்களில் நடித்த திரிஷா, நீல நிற பட்டுப் புடவையில் பாரம்பரிய உடையில் வந்திருந்தார். வைர மற்றும் மாணிக்க கற்கள் பதித்த ஆபரணங்களை அணிந்து தேவதை போல் காட்சியளித்தார். சிரித்த முகத்துடன் வந்த அவர், விஜய்யின் தாயார் ஷோபாவை கட்டியணைத்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். பின்னர் அரங்கில் இருந்தவர்களை நோக்கி கையசைத்து வாழ்த்து தெரிவித்தார். விஜய் மற்றும் திரிஷா இணைந்து நடித்த திரைப்படங்கள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அவரது வருகை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. “முதல்வர் விஜய்யின் பதவியேற்பில் திரிஷா” என்ற தலைப்பில் ரசிகர்கள் பலரும் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

விஜய்யின் தந்தை மற்றும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபா சந்திரசேகர் ஆகியோர் முன்வரிசையில் அமர்ந்து தங்கள் மகன் முதல்வராகப் பதவியேற்பதை நெகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர்.

விஜய்யின் இன்னும் வெளியாகாத 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் கே.எல். நாராயணா இவ்விழாவில் பங்கேற்றார். மேலும், விஜய்யின் 'கோட்' படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தியும் கலந்து கொண்டார்.

'புதிய கீதை' படத்தில் விஜய்யுடன் நடித்த நடிகர் ஜெய், 'வாரிசு' படத்தில் நடித்த நடிகை சங்கீதா மற்றும் அவரது கணவர் பாடகர் கிரிஷ் ஆகியோர் தங்கள் மகளுடன் வந்திருந்தனர். விஜய்யின் அறிமுகப் பாடல்கள் பலவற்றை எழுதிய பாடலாசிரியர் விவேக் உள்ளிட்ட பல தொழில்நுட்பக் கலைஞர்களும் இவ்விழாவில் பங்கேற்று விஜய்க்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அரசியல் களமும் திரையுலகமும் கைகோர்த்த இந்த விழா, விஜய்யின் சினிமா மற்றும் அரசியல் பயணத்தின் முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com