சினிமா கேள்வி பதில் ! குருவியார்

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டியமுகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
‘சார்லி சாப்ளின்-2’ படத்தில் விவேக் பிரசன்னா, பிரபுதேவா, அரவிந்த் ஆகாஷ், சந்தனா.
‘சார்லி சாப்ளின்-2’ படத்தில் விவேக் பிரசன்னா, பிரபுதேவா, அரவிந்த் ஆகாஷ், சந்தனா.
Published on

குருவியாரே, அமலாபாலுக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருக்கிறதா? (எஸ்.விக்னேஷ், சென்னை18)

படத்தில், புகை பிடிப்பது போன்ற காட்சியில் நடித்த அனுபவத்தை தவிர, வேறு எந்த பழக்க வழக்கமும் எனக்கு இல்லை. சிகரெட் புகை வாசனை எனக்கு பிடிக்காது என்கிறார், அமலாபால்.

***

தமிழ் பட உலக சமீபகால வரவுகள் சாயிஷா, ராசிகன்னா ஆகிய இருவரில் அதிக படங்களை கைப்பற்றும் திறமை யாருக்கு இருக்கிறது? (கே.ஸ்ரீதர், திருப்பூர்)

சாயிஷா, ராசிகன்னா ஆகிய இருவரில் சாயிஷாவுக்கே அதிக படங்களை கைப்பற்றும் திறமை இருக்கிறதாம். இவர் மும்பை ஸ்டைலில் கதாநாயகர்களுக்கு விருந்து கொடுத்து வாய்ப்புகளை கைப்பற்றுவதாக பேசப்படுகிறது.

***

குருவியாரே, சிவகார்த்திகேயன்நயன்தாரா ஆகிய இருவரிடையே இருந்த நட்பு மேலும் நெருக்கமாகி வருவதாக கூறப்படுகிறதே... அது உண்மையா? (ஆர்.தம்பிதுரை, கொளத்தூர்)

இருவரும் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்திருப்பது, அவர்களின் நெருக்கமான நட்பை உறுதிப்படுத்துகிறது என்கிறார்கள், படக்குழுவினர்.

***

சசிகுமார் நடித்து அடுத்து திரைக்கு வரயிருக்கும் படம் எது, எப்போது திரைக்கு வரும்? (வி.கவுதம், அன்னதானப்பட்டி)

சசிகுமார் நடித்து அடுத்து திரைக்கு வரும் படம், கொம்பு வச்ச சிங்கம். இந்த படத்தை அடுத்த மாதம் (பிப்ரவரி) திரைக்கு கொண்டுவர முயற்சி நடக்கிறது.

***

குருவியாரே, நடிகர் அர்ஜுன் மிக தீவிரமான ஆன்மிகவாதியாமே... அது உண்மையா? (சி.கவுரி சங்கர், வேலப்பன்சாவடி)

அர்ஜுன், ஆன்மிகவாதிதான். அவர் ஆஞ்சநேயர் மீது தீவிர பற்று கொண்ட பக்தர். ஆஞ்சநேயருக்காக தனது பண்ணை வீட்டு தோட்டத்தில், கோவில் கட்டி வழிபட்டு வருகிறார்.

***

ஜெயம் ரவி அடக்க ஒடுக்கமானவரா அல்லது ஆர்ப்பாட்டமான நாயகனா? (ஜே.அருண்குமார், தஞ்சை)

சத்தமே இல்லாமல் சாதனைகளை செய்து வரும் கதாநாயகர்களில், ஜெயம் ரவியும் ஒருவர். ஆடம்பரமும், ஆர்ப்பாட்டமும் அறவே பிடிக்காத அடக்க ஒடுக்கமான நாயகன், இவர்.

***

குருவியாரே, டைரக்டர் கே.பாக்யராஜ், நடிகர் சத்யராஜ் ஆகிய இருவரில் வயதில் மூத்தவர் யார், இரண்டு பேருக்கும் உள்ள ஒற்றுமை என்ன? (டி.கோலப்பன், ஈரோடு)

சத்யராஜை விட 4 வயது மூத்தவர், கே.பாக்யராஜ்! இரண்டு பேருக்கும் சொந்த ஊர், கோவை.

***

தற்போது, குத்து பாட்டுக்கு, கவர்ச்சி நடனம் ஆடுவதற்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார்? (கோமதி நாயகம், தென்காசி)

குத்து பாட்டுக்கும், கவர்ச்சி நடனத்துக்கும் அதிக சம்பளம் வாங்குபவர், ஓவியா! கவர்ச்சி ஆட்டத்தில் இவர் மற்ற கதாநாயகிகள் எல்லோரையும் பின்னால் தள்ளி விட்டாராம்.

***

குருவியாரே, விளம்பர படங்களுக்கு அதிக சம்பளம் வாங்கி வருபவர்கள் யார்யார்? (கே.செல்வசேகரன், ஸ்ரீரங்கம்)

நயன்தாரா, ஜோதிகா, சமந்தா... இவர்கள் மூவரும் விளம்பர படங்களில் நடிக்க அதிக சம்பளம் வாங்கி வருகிறார்கள். இவர்களுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் நாயகி, தேவயானி.

***

எம்.ஜி.ஆரும், கே.ஆர்.விஜயாவும் ஜோடியாக நடித்து அதிக நாட்கள் ஓடி, அதிக வசூல் செய்த படங்கள் எவை? (எச்.முகமது காசிம், கொடைக்கானல்)

விவசாயி, பணம் படைத்தவன், நான் ஏன் பிறந்தேன், நல்ல நேரம் ஆகிய 4 படங்களும் அதிக நாட்கள் ஓடி, அதிக வசூல் செய்த படங்கள்.

***

குருவியாரே, சிம்ரன், திரிஷா ஆகிய இருவரில், காதல் காட்சிகளில், இளைஞர்களின் மனதை வசீகரித்தவர் யார்? (ரவீந்திரன், அம்மாப்பேட்டை)

திரிஷா! இளைஞர்களால் காதல் தேவதையாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர், இவர்தான். (ஆதாரம்: விண்ணைத்தாண்டி வருவாயா, 96 ஆகிய படங்கள்)

***

இளையராஜாயுவன் சங்கர்ராஜா ஆகிய இருவரும் ஒரு படத்துக்கு இணைந்து இசையமைப்பார்களா? (ஞானராஜா, கடலூர்)

ராஜா மனது வைத்தால், ராஜாவுடன் ராஜா இணைந்து இசையமைப்பார்.

***

குருவியாரே, ஸ்ரேயா அவ்வளவுதானா? அவரை இனிமேல் திரையில் பார்க்க முடியாதா? (எம்.அரவிந்த், புதுச்சேரி)

அக்காள், அண்ணி, அம்மா வேடங்கள் தயாராக இருக்கின்றன. இதில் ஏதேனும் ஒன்றை ஸ்ரேயா ஏற்றுக் கொண்டு திரையில் தோன்றலாம்.

***

விஜய் சேதுபதி தனது பிறந்த நாளை எப்படி கொண்டாடினார்? (டி.ஆர்.சவுந்தர், சேலம்)

எந்தவித அமர்க்களமும், ஆர்ப்பாட்டமும் இல்லாமல், நட்பு வட்டாரத்துடன் உற்சாகமாக கொண்டாடினாராம்.

***

குருவியாரே, லைலா, மாளவிகா ஆகிய இருவரும் இப்போது எங்கே, எப்படி இருக்கிறார்கள்? (சு.பொன்வசந்தன், நாகர்கோவில்)

லைலாவும், மாளவிகாவும் மும்பையில் கணவர்குழந்தைகளுடன் குடும்பம் நடத்தி வருகிறார்கள். இருவருக்குள்ளும் நடிப்பு ஆசை துளிர் விடும்போதெல்லாம் சென்னையில் இருக்கும் நட்புக்குரிய டைரக்டர்களிடம் பேசி, தற்போதைய திரைப்பட நிலவரங்களை தெரிந்து கொள்கிறார்களாம்.

***

வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு, சிரிப்பு நடிகர் செந்திலின் தம்பிதானே... இருவரும் எப்படிப்பட்ட சுபாவம்? (பி.செந்தில்நாதன், குடியாத்தம்)

செந்தில், யோகி பாபு இருவருக்கும் இடையே எந்த ரத்தபந்த உறவும் இல்லை. இருவரும் வேறு வேறு குடும்பங்களை சேர்ந்தவர்கள். இரண்டு பேரில் செந்தில், அப்பாவி. யோகி பாபு, புத்திசாலி.

***

குருவியாரே, சமீபகால தமிழ் படங்களில் ஏதேனும் ஒரு விளையாட்டை மெயின் கதைக்குள் செருகுவது ஏன்? (ஏ.ஆவுடையப்பன், குலசேகரன்பட்டினம்)

விளையாட்டை கருவாக கொண்ட படங்கள் அனைத்தும் வெற்றி பெற்று வருவதால், அந்த செருகல் வேலை நடப்பதாக பேசப்படுகிறது.

***

நான், கீர்த்தி சுரேசின் தீவிர ரசிகர். அவரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன். என் ஆசை நிறைவேறுமா? (சீனிவாசன், மதுரை)

ஆசைப்படுகிற ரசிகர்களை எல்லாம் மணந்து கொண்டால் என்ன ஆவது? கீர்த்தி சுரேஷ் ஆசைப்படுபவரையே மணமகனாக தேர்வு செய்வாராம்.

***

குருவியாரே, டார்ச் லைட் படத்தில் சதா ரோட்டோர அழகியாக நடித்து இருந்தாரே... அந்த வேடத்தை அவர் பிடித்துதான் செய்திருந்தாரா? (பி.வி.தமிழ் இனியன், கிருஷ்ணகிரி)

கேட்கிற சம்பளத்தை தயாரிப்பாளர் கொடுத்து விட்டால், கதாநாயகிக்கு கதையும் பிடித்து விடும். கதாபாத்திரமும் பிடித்து விடும்.

***

கல்யாண ஆசை வந்த காரணத்தை சொல்லவா? என்று தொடங்கும் பாடல், எந்த படத்தில் இடம் பெற்றது? பாடலை பாடியவர், பாடல் காட்சியில் நடித்தவர் யார்யார்? (கே.தட்சிணாமூர்த்தி, திருக்கோவிலூர்)

அந்த பாடல் இடம் பெற்ற படம்: எங்கள் தங்க ராஜா. பாடியவர்கள்: டி.எம்.சவுந்தரராஜன்பி.சுசீலா. நடித்தவர்கள்: நடிகர் திலகம் சிவாஜிகணேசன்மஞ்சுளா.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com