

குருவியாரே, ரஜினிகாந்த் நடித்த 2.0, காலா ஆகிய 2 படங்களும் எந்த நிலையில் உள்ளன? (வி.ஜெயபாலாஜி, திருச்சி)
2 படங்களின் படப்பிடிப்புகளும் முடிவடைந்து விட்டன. 2.0 படம் ஜனவரி மாதத்திலும், காலா படம் ஏப்ரல் மாதத்திலும் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன!
***
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமானால், அதில் ஜெயலலிதாவாக நடிப்பது யார்? (எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு)
ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படமாவது உண்மைதான். அவருடைய கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா ஆகிய மூன்று பேர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. இவர்கள் மூன்று பேரில் ஒருவர், ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிப்பார்!
***
குருவியாரே, ஒரு படம் முடிந்ததும் விஜய், அஜித் இருவரும் வெளிநாடு சென்று விடுகிறார்களே..ஏன்? (சி.ரவிச்சந்திரன், மேட்டுப்பாளையம்)
கடுமையான உழைப்புக்குப்பின், இருவருக்கும் கொஞ்சம் ஓய்வு தேவைப்படுகிறதாம்...யாருடைய தொல்லையும், இடையூறும் இல்லாத ஓய்வு. அதற்காகவே இருவரும் வெளிநாடு போய் ஓய்வு எடுக்கிறார்களாம்!
***
வடிவேல், சூரி ஆகிய 2 பேரில் கைவசம் அதிக படங்களை வைத்திருப்பவர் யார்? (துரை வேலப்பன், காஞ்சிபுரம்)
சூரி! இவருடைய கைவசம் 12 புதிய படங்கள் உள்ளன!
***
டைரக்டர் மிஷ்கினுக்கு பிடித்த உணவு எது? (டி.சாம்சன், வேலூர்)
பழைய சோறும், கருவாட்டு குழம்பும் மிஷ் கினுக்கு ரொம்ப பிடிக்குமாம்!
***
குருவியாரே, கவர்ச்சி நடிகைகள் அனுராதா, பபிதா இருவரும் என்ன ஆனார்கள்? இரண்டு பேரும் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? (பி.விஜய்குமார், பண்ருட்டி)
அனுராதா, சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். பபிதா, சினிமாவை விட்டு ஒதுங்கியிருக்கிறார்!
***
கொடிவீரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் மகிமா நம்பியார், எந்த ஊரை சேர்ந்தவர்? (எஸ்.சி.ஸ்டீபன், மறவன் குடியிருப்பு)
மகிமா நம்பியார், கேரளாவை சேர்ந்தவர்!
***
குருவியாரே, திரைப்படங் களில் நடித்துக்கொண்டே சொந்தமாக தொழில் செய்யும் நடிகர்கள் யார்-யார்? (அசோக், கோவை)
ஆர்யா, பிரியாணி கடை நடத்தி வருகிறார். சூரி, பரோட்டா கடை நடத்தி வருகிறார்! இன்னும் சிலர் சத்தமே இல்லாமல், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்கள்!
***
திருட்டுப்பயலே-2 படத்தில் அமலாபாலுக்கு என்ன வேடம்? (வே.கவுதம், முகப்பேர்)
திருட்டுப்பயலே-2 படத்தில், வில்லனால் மிரட்டப்படும் ஒரு பணக்கார பெண்ணாக அமலாபால் வருகிறார்!
***
குருவியாரே, சுந்தர் சி.யின் சங்கமித்ரா படம் எந்த நிலையில் உள்ளது? (ஜெ.லத்தீப், ஆம்பூர்)
அந்த படத்தில் நடிக்கும் நடிகர்-நடிகைகள் ஒவ்வொருவராக உறுதி செய்யப்படுகிறார்கள்!
***
நடிகை ஆண்ட்ரியா துணிச்சல் மிகுந்த சுபாவமா அல்லது கோழையான சுபாவமா? (எஸ்.காஜாமைதீன், பேராவூரணி)
ஆண்ட்ரியா துணிச்சல் மிகுந்த சுபாவம் கொண்டவர். இல்லையென்றால், அவர் உதட்டுடன் உதடு சேர்க்கும் முத்த காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி யிருப்பாரா?
***
குருவியாரே, மெர்சல், ஸ்பைடர் ஆகிய படங்களில் வில்லனாக நடித்த எஸ்.ஜே.சூர்யா, தொடர்ந்து வில்லன் வேடங்களில் நடிப்பாரா? (எம்.ரஞ்சித், பெரியகுளம்)
கதாநாயகனுக்கு இணையான வில்லனாக இருந்தால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பாராம்!
***
பாகுபலி புகழ் ராஜமவுலி நேரடி தமிழ் படம் ஒன்றை டைரக்டு செய்வாரா? (என்.அரவிந்த், வாலாஜாப்பேட்டை)
ராஜமவுலியை சுற்றி தெலுங்கு பட உலகம் இரும்பு வேலி போட்டு பாதுகாத்து வருகிறதாம். அந்த இரும்பு வேலியை தாண்டி அவரும் வெளியில் வர விரும்பவில்லையாம்!
***
குருவியாரே, விஜய் சேதுபதி நடிக்கும் எல்லா படங் களும் வெற்றி படங்களாக அமைகிறதே...அதற்கு காரணம் என்ன? (கே.பிரதாப், அருப்புக்கோட்டை)
வெற்றி பெறும் கதைகளை தேர்வு செய்யும் நுட்பம் தெரிந்தவர், விஜய் சேதுபதி. கதைதான் படங்களின் வெற்றியை உறுதி செய்கின்றன என்ற உண்மையை உணர்ந்தவர், அவர்!
***
கிசுகிசுக்களில் அடிக்கடி சிக்கி பரபரப்பை ஏற்படுத்தும் நடிகை யார்? (ஏ.பெஞ்சமின், மேட்டூர்)
நயன்தாரா! இவர் அளவுக்கு வேறு எந்த நடிகையும் கிசுகிசுக்களில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தவில்லை!
***
மறைந்த இயக்குனர் கே.பாலசந்தர் டைரக்டு செய்த படங்களில், காலத்தால் அழிக்க முடியாத காதல் காவியம் எது? (ஆர்.தங்கதுரை, கோவில்பட்டி)
மரோசரித்ரா! தெலுங்கில் வெளியான இந்த படம், ஏக் துஜே கேலியே என்ற பெயரில் இந்தியிலும் படமானது. 2 படங்களையும் கே.பாலசந்தரே இயக்கினார். காலத்தால் அழிக்க முடியாத காதல் காவியம் என்று ரசிகர் களால் பாராட்டப்பட்ட படம், இது!
***
அரவிந்தசாமி இனிமேல் வில்லனாக நடிக்க மாட்டேன் என்று கூறி வருகிறாராமே...அது உண்மையா? (எம்.மோகன், ஈரோடு)
அரவிந்தசாமி, அவருடைய தோற்றத்துக்கு பொருந்துகிற வேடங்
களில் மட்டுமே நடிப்பாராம். அது வில்லனாக இருந்தாலும் சரி. கதாநாயகனாக இருந்தாலும் சரி!
***
குருவியாரே, லட்சுமி மேனனுக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டதாமே...? (எம்.பிரவீன்குமார், கம்பம்)
அதுபற்றி எல்லாம் அவர் கவலைப்பட மாட்டார்! வந்ததை வரவில் வைப்போம்...சென்றதை செலவில் வைப்போம் என்ற கொள்கை பிடிப்புள்ளவர், லட்சுமி மேனன்!
***
குருவியாரே, கேத்தரின் தெரசாவும் காதல் வலையில் சிக்கியதாக கூறப்படுகிறதே? அவருடைய காதலர் யார்? (ஜெ.ஆபிரகாம் லிங்கன், பொள்ளாச்சி)
கேத்தரின் தெரசாவும், தமிழ் பட உலகில் முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் ஒரு கதாநாயகனும் காதலித்து வருவதாக கிசுகிசு பரவியிருக்கிறது. இது உண்மையா, வதந்தியா? என்பது விரைவில் தெரிந்து விடும்!
***
குருவியாரே, கே.எஸ்.ரவிகுமார் இயக்கி வரும் புதிய படம் எது? (ஜி.குரு, நெய்வேலி)
கே.எஸ்.ரவிகுமார், இப்போது ஒரு தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார். அதில் பால
கிருஷ்ணா, நயன்தாரா ஆகிய இருவரும் நடித்து வருகிறார்கள்!
***