சினிமா கேள்வி-பதில்! : குருவியார்

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
சினிமா கேள்வி-பதில்! : குருவியார்
Published on

குருவியாரே, ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படத்தில், அவர் என்ன வேடத்தில் நடிக் கிறார்? அவருக்கு ஜோடியாக நடிப்பவர் யார்? (பி.கணபதி சுப்பிரமணியம், மேட்டூர்)

பேட்ட படத்தில், கல்லூரி விடுதி வார்டனாக ரஜினிகாந்த் நடிக்கிறார் என்று வெளியே தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் அதில் பாதிதான் உண்மை. பாதி, தவறான தகவல் என்று படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள். படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். அவர் தொடர்பான காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. இன்னொரு கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார்!

***

குருவியாரே, ரஷிய காதலரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா, இனிமேல் எப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறார்? (ஆர்.செல்வகுமார், ஊரப்பாக்கம்)

அவருக்கு முக்கியத்துவம் உள்ள எந்த வேடமாக இருந்தாலும் நடிக்க தயாராக இருக்கிறாராம்!

***

நயன்தாராவுக்கு அடுத்த படியாக அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார்? (எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு)

அனுஷ்கா! இவர், ஒரு படத்துக்கு ரூ.3 கோடியில் இருந்து ரூ.4 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்!

***

குருவியாரே, எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் ஆகிய மூன்று பேரில் யாருடைய இசையில் கவிஞர் வைரமுத்து அதிக பாடல்களை எழுதியுள்ளார்? (ஜி.ஸ்ரீதர் ராஜன், பனைமரத்துப்பட்டி)

ஏ.ஆர்.ரகுமான் இசையில், கவிஞர் வைரமுத்து அதிக பாடல்களை எழுதியிருக்கிறார்!

***

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த ஆயிரத்தில் ஒருவன், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய 2 படங்களில், அதிக நாட்கள் ஓடிய படம் எது? அதிக வசூல் செய்த படம் எது? (கே.வினோத், வேலூர்)

ஆயிரத்தில் ஒருவன், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய 2 படங்களுமே வெள்ளி விழாவை (225 நாட்கள்) தாண்டி ஓடி, வசூல் சாதனை செய்தன. ஆயிரத்தில் ஒருவன் படத்தை விட, உலகம் சுற்றும் வாலிபன் படம் மிக அதிக நாட்கள் ஓடி, வசூல் சாதனை செய்தது!

***

இளம் கதாநாயகன் அதர்வாவுக்கு உடன் பிறந்த சகோதரர்-சகோதரி எத்தனை பேர் இருக்கிறார்கள்? (ஜீவா, மதுரை)

அதர்வாவுக்கு ஒரு தங்கையும், ஒரு தம்பியும் இருக்கிறார்கள்!

***

குருவியாரே, சமீபகால தமிழ் திரைப்படங்களில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கும் அருள்தாஸ், இதற்கு முன்பு என்ன தொழில் செய்து கொண்டிருந்தார்? (எஸ்.ரவீந்தர் தாஸ், லால்குடி)

அருள்தாஸ், ஒளிப்பதிவாளராக தனது வாழ்க்கையை தொடங்கினார். இப்போது தமிழ் பட உலகின் முக்கிய வில்லன்களில் ஒருவராகி விட்டார். குறிப்பாக தாதாக்களின் கதையாக இருந்தால், அருள்தாஸ் தவறாமல் இடம் பெறுகிறார்!

***

குருவியாரே, சரத்குமாரும், ராதிகா சரத்குமாரும் எத்தனை படங்களில் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள்? (ரா.தேன்மொழி, அருப்புக்கோட்டை)

நம்ம அண்ணாச்சி, சூர்யவம்சம் ஆகிய 2 படங்களில் சரத்குமாரும், ராதிகா சரத்குமாரும் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள்!

***

மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்... என்று தொடங்கும் பாடல் இடம் பெற்ற படம் எது? (ஏ.சி.முத்து, தூத்துக்குடி)

அந்த பாடல் இடம் பெற்ற படம், நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த ராஜபார்ட் ரங்கதுரை!

***

குருவியாரே, தமிழ் பட உலகில் ஒரு காலத்தில், கவர்ச்சி நடன நடிகைகள் என்று ஒரு பிரிவினர் இருந்தார்கள். அவர்களின் கவர்ச்சி நடன பாடல்கள் படங்களில் தவறாமல் இடம் பெற்றன. அந்த கவர்ச்சி நடன நடிகைகள் இப்போது காணாமல் போய்விட்டார்கள். இது எப்படி நடந்தது? (பி.சி.விஜயகுமார், நங்கநல்லூர்)

இப்போதெல்லாம் கவர்ச்சி நடனங்களை கதாநாயகிகளே ஆடிவிடுகிறார்கள். அதனால், கவர்ச்சி நடன நடிகைகளுக்கு வேலையில்லாமல் போய்விட்டது!

***

நகைச்சுவை நடிகர் யோகி பாபு தனது பெயருடன், யோகி என்ற வார்த்தையை சேர்த்துள்ளாரே...அது எதை குறிக்கிறது? (எம்.துரை, திருச்சி)

யோகி என்பது அவர் அறிமுகமான படத்தின் பெயர். அதை தன் பெயருடன் இணைத்து, யோகி பாபு ஆகிவிட்டார்!

***

குருவியாரே, நயன்தாராவுக்கு அக்காவாக நடிக்க பொருத்தமான நடிகை யார்? (சி.பி.ராஜ், காட்டுமன்னார்கோவில்)

கடலோர கவிதைகள் ரேகா!

***

குருவியாரே, ஜெயம் ரவி நடித்து அடுத்து திரைக்கு வரும் படம் எது, அந்த படத்தில் அவருக்கு ஜோடி யார், டைரக்டு செய்தவர் யார்? (கி.வின்சென்ட், கடலூர்)

ஜெயம் ரவி நடித்து அடுத்து திரைக்கு வர இருக்கும் புதிய படம், அடங்க மறு. இந்த படத்தில், ஜெயம் ரவியின் ஜோடியாக ராசிகன்னா நடிக்கிறார். டைரக்டரின் பெயர், கார்த்திக் தங்கவேல்! இவர், டைரக்டர்கள் சரண், அமீர், மிஷ்கின் ஆகியோரிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தவர்!

***

மும்தாஜ், திரைப்படங்களில் நடிப்பதை விரும்பவில்லையோ? சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மட்டும் தோன்றுகிறாரே...? (விஜி, புதுச்சேரி)

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தோன்றினால் மட்டும் போதும் என்று மும்தாஜ் நினைக்கிறாரோ, என்னவோ?

***

குருவியாரே, ஜோதிகா நடித்த செக்க சிவந்த வானம், காற்றின் மொழி ஆகிய 2 படங்களில், எது முதலில் திரைக்கு வரும்? (என்.ஞானசேகர், ஈரோடு)

செக்க சிவந்த வானம், முதலில் திரைக்கு வரும்! அந்த படம், இம்மாதம் இறுதியில் வெளிவரும் என்று தெரிகிறது!

***

ஒளிப்பதிவாளராக இருந்து குணச்சித்ர வேடங்களுக்கு மாறிய முதல் நடிகர் யார்? அவர் எத்தனை படங்களில் நடித்து இருக்கிறார்? (இரா.அன்புக்கரசு, பெரியகுளம்)

இளவரசு! இவர், 100 படங்களுக்கு மேல் நடித்து விட்டார்!

***

அரவிந்தசாமி ஒரு படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் (எஸ்.புகழேந்தி, தஞ்சை)

ரூ.5 கோடி சம்பளம் கேட்கிறார். பேரம் பேசினால், ரூ.3 கோடி வரை இறங்கி வருகிறாராம்!

***

அக்காள், அண்ணி வேடங்களில் நடிக்க அழைத்தால் சில நடிகைகள், கோபப்படுகிறார்களாமே...அப்படியா? (பிரவீன்குமார், திண்டிவனம்)

எந்த ஒரு நடிகையும் தன்னை வயதானவராக காட்டுவதை விரும்புவதில்லை!

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com