‘கூஸ்கோா் பண்டட்'’ படத்தின் டைட்டில் சர்ச்சை - பாலிவுட் இயக்குநர் விளக்கம்

மனோஜ் பாஜ்பாய் நடித்துள்ள ‘கூஸ்கோர் பண்டட்'’ படக்குழுவினர் மீது யோகி ஆதித்யநாத் உத்தரவால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
‘கூஸ்கோா் பண்டட்'’ படத்தின் டைட்டில் சர்ச்சை - பாலிவுட் இயக்குநர்  விளக்கம்
Published on

‘கூஸ்கோர் பண்டட்’ என்ற படத்தினை பாலிவுட் இயக்குநர் நீரஜ் பாண்டே இயக்கியுள்ளார். நடிகர் மனோஜ் பாஜ்பாயி நடித்துள்ள இந்தப் பட டீசர் கடந்த 3ம் தேதி வெளியானது. கையூட்டு பெறும் பண்டிட் எனப் பொருள்படும் இந்தப் படத்தின் டைட்டில் சமூக வலைதளத்தில் மிகுந்த சர்ச்சையானது. ‘கூஸ்கோர் பண்டட்’ என்ற படத்தின் டைட்டிலுக்கு எழுந்த சாதிய ரீதியான சர்ச்சைக்கு பாலிவுட் இயக்குநர் நீரஜ் பாண்டே விளக்கம் அளித்துள்ளார். சமூக உணர்வுகளைப் பாதித்ததால் யூடியூப், நெட்பிளிக்ஸில் கடந்த 3ம் தேதி வெளியான இந்தப் படத்தின் டீசர் நீக்கப்பட்டுள்ளதாகப் படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் அசுதோஷ் துபே, நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார். டெல்லி உயர் நீதிமன்றத்திலும் வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் என்பவர் இந்தப் படத்தின் வெளியீட்டிற்குத் தடை விதிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் ‘கூஸ்கோர் பண்டட்’ ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி. உத்தரப் பிரதேச காவல்துறை படக்குழுவினர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் உத்தரவின் பேரில், சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் செயல்பட்டதற்காக இயக்குநர் நீரஜ் பாண்டே மற்றும் படக் குழுவினர் மீது லக்னோ காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து இயக்குநர் நீரஜ் பாண்டே விளக்கமளித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “எங்களது திரைப்படம் புனைவாக உருவாக்கப்பட்டது. இதில் வரும் ‘பண்டிட்’ என்ற வார்த்தை பேச்சு வழக்கில் சாதாரணமாக வைக்கப்பட்டது. இந்தக் கதை தனி ஒரு மனிதனைப் பற்றிய கதை என்பதால் அது ஒரு சமூகம், மதம், சாதியைப் பிரதிபலிக்கும் நோக்கில் உருவாக்கப்படவில்லை.இயக்குநராக நான் எனது பணியை மிகுந்த பொறுப்புடன் செய்து வருகிறேன். எனது கதைகள் நல்ல எண்ணத்துடன் மரியாதையுடன்தான் உருவாக்கப்படுகிறது. இருந்தும் எங்கள் படத்தின் தலைப்பு சிலருக்கு மனக் கஷ்டத்தை ஏற்படுத்தியதைப் புரிந்துகொள்கிறோம். அந்த உணர்வுகளை நிஜமாகவே புரிந்துகொண்டு, அது தொடர்பானவற்றை நீக்குகிறோம். எங்களது படத்தை முழுமையாகப் பார்த்தால் நாங்கள் எந்த நோக்கத்தில் எடுத்துள்ளோம் என்பதை புரிந்துகொள்வார்கள் என்று நினைக்கிறேன். மாறாக, வெறும் டீசரைப் பார்த்து முடிவெடுக்காதீர்கள். விரைவில் படத்தை மக்களுக்கு காண்பிக்க ஆவலுடன் இருக்கிறோம்” என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com