

சென்னை,
கோவை பகுதிக்குட்பட்ட சூலூரில் 10 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பது ஒட்டு மொத்த தமிழகத்தையும் உலுக்கி இருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேசியதாவது, "சூலூரில் 10 வயது பெண் குழந்தை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த காவல் துறையினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். குற்றத்தை அவன் ஒப்புக்கொண்ட பின் தொலைக்காட்சி சேனல்களில் அதைப்பற்றிய விவாதங்களும், கருத்துக்கூறல்களும் எதற்கு? உடனடியாக களையெடுக்க வேண்டியதுதானே? அப்போதுதானே மற்றவர்களுக்கு பயம் வரும்!
இவன் போன்ற குற்றவாளிகள் சமுதாயத்திற்கு அவசியமா? ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் அவனுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து மக்கள் வரிப்பணத்தில் அவன் தின்று கொண்டிருக்கிறான். கள்ள உறவுக்காக குழந்தைகளை கொன்றவளும், அவளது பிரியாணி காதலனும் அவ்வாறே! இப்போது இவன். இவனுக்கு உதவ இன்னொருவன் அனைவர் பின்னாலும் அரசாங்கம் ஓட முடியுமா? இவர்கள் வாழத்தகுதி அற்றவர்கள் என்பதே என் கருத்து. குழந்தையை இழந்து வாடும் அந்த குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்." என்று தெரிவித்துள்ளார்.