தனுஷ் பட பூஜையில் சலசலப்பு... கேமராவால் ஏற்பட்ட பிரச்சினை

மாரநாடு கிராமத்தில் உள்ள கருப்பணசாமி கோவிலில் நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய (D56) படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.

தனுஷ் பட பூஜையில் சலசலப்பு... கேமராவால் ஏற்பட்ட பிரச்சினை
Published on: 

சிவகங்கை,

பூஜைக்கான ஏற்பாடுகள் கோவில் வளாகத்திற்குள் நடைபெற்ற போது படக்குழுவினர் கேமராவை கோவிலுக்குள் கொண்டு வந்தனர். இதனை கண்ட அறநிலையத்துறை ஊழியர் பெரியசாமி என்பவர் கோவிலுக்குள் கேமரா வைக்க அனுமதி இல்லை என்றதால் படக்குழுவினருக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தனுஷ் நடிக்கும் புதிய பட பூஜை

சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி அருகே மாரநாடு கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாரநாட்டு கருப்பணசாமி கோவிலில் நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய (D56) படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, பிரீத்தி முகுந்தன், காளிவெங்கட், வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

18 அடி உயர அரிவாள் காணிக்கை

இந்த நிலையில், டி56 படக்குழுவினர் சார்பில் நடிகர் தனுஷ், 18 அடி உயர பிரமாண்ட அரிவாளை மாரநாடு கருப்பணசாமிக்கு காணிக்கையாக வழங்கினார். மேலும் 20 கிடாய்கள் பலியிட்டு பூஜைகள் நடந்தன. ரசிகர்கள், திரைப்பட குழுவினர்களுக்கு கறிவிருந்து வழங்கப்பட்டது. இதில் 1,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாப்பிட்டனர்.

கேமராவால் வந்த பிரச்சினை

இந்த படபூஜைக்காக போலீசாரிடம் படக்குழுவினர் முறையான அனுமதி பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே பூஜைக்கான ஏற்பாடுகள் கோவில் வளாகத்திற்குள் நடைபெற்ற போது படக்குழுவினர் கேமராவை கோவிலுக்குள் கொண்டு வந்தனர். இதனை கண்ட அறநிலையத்துறை ஊழியர் பெரியசாமி என்பவர் கோவிலுக்குள் கேமரா வைக்க அனுமதி இல்லை, இதற்கு அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற வேண்டும், எனவே கேமராவை வெளியே கொண்டு செல்லுங்கள் என கூறினார். இதனால் படக்குழுவினருக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com