

சென்னை,
இளைஞரை மிரட்டி ரூ.5 லட்சம் பணம் மற்றும் செல்போனை பறித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பிக்பாஸ் பிரபலம் வர்ஷினியை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை வர்ஷினி வெங்கட். பிக் பாஸ் தமிழ் 8வது சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்து கவனம் பெற்ற இவர், பின்னர் சந்தானம் நடிப்பில் வெளிவந்த 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில் நடித்தார்.
இதற்கிடையே, வர்ஷினி வெங்கட் குறும்படம் எடுப்பதற்காக முதலீடு செய்யுங்கள் எனக் கூறி தன்னை ஏமாற்றியதாக ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். பணத்தை கேட்டபோது கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி, பேச அழைத்து தன்னை தாக்கி, இரண்டு செல்போன்கள் மற்றும் 50 ஆயிரம் ரூபாயை பறித்ததாகவும், அதன் பின்னர் தொலைபேசியில் மிரட்டி வங்கி பரிவர்த்தனை மூலம் 5 லட்சம் ரூபாய் பறித்ததாகவும் சம்பந்தப்பட்ட நபர் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ரூ.27 லட்சம் கேட்பதாகவும், தராவிட்டால் பொய் வழக்கு போடுவோம் என மிரட்டுவதாகவும் அதில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வர்ஷினி வெங்கட், சஞ்சய் உட்பட 4 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் வர்ஷினியை கைது செய்துள்ளது.