மகளிர் ஆணையத்தில் புகார்: “நான், பெண்களை இழிவுபடுத்தவில்லை” இயக்குனர் பாக்யராஜ் விளக்கம்

பிரபல இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் பெண்கள் குறித்த சர்ச்சை கருத்தை வெளியிட்டதாக எதிர்ப்புகள் கிளம்பின. போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.
மகளிர் ஆணையத்தில் புகார்: “நான், பெண்களை இழிவுபடுத்தவில்லை” இயக்குனர் பாக்யராஜ் விளக்கம்
Published on

தமிழக மகளிர் ஆணையத்துக்கு ஆந்திர மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பி பாக்யராஜ் மீது நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தி உள்ளது. இந்த பிரச்சினை குறித்து பாக்யராஜ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

பொள்ளாச்சி சம்பவத்தில் என்னை விட்டுவிடுங்கள் அண்ணா என்று பெண்கள் கதறுவதை வீடியோவில் பார்த்து ஒரு தந்தையாக நான் பதறினேன். இரவில் தூக்கம் வரவில்லை. பெண்கள் ஏன் இப்படி இடம் கொடுத்தார்கள். எச்சரிக்கையாக இருந்து இருக்கலாமே என்ற கவலையில்தான் சில கருத்துக்களை வெளியிட்டேன்.

மற்றபடி பெண்களுக்கு நான் மதிப்பு கொடுப்பவன். எம்.ஜி.ஆரைப்போல் அனைத்து தாய்குலங்களையும் மதித்து வருகிறேன். நான் எடுத்த மவுன கீதங்கள், தூறல் நின்னுபோச்சு, முந்தானை முடிச்சு, தாவணிக்கனவுகள் உள்ளிட்ட அனைத்து படங்களிலுமே பெண்களை போற்றி இருந்தேன். அவர்களை தவறாக காட்டியதே இல்லை. பொள்ளாச்சி சம்பவத்தின் தாக்கத்தால் பெண்கள் ஜாக்கிரதையாக இருந்திருக்கலாமே என்றுதான் அப்படி பேசினேன். வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. என் பேச்சுக்கு சில விமர்சனங்கள் இருந்தாலும் நிறைய பேர் சரியான கருத்தை சொன்னதாகவே எண்ணியுள்ளனர். முன்பு பெண்கள் தங்களுக்கென்று சில கட்டுப்பாடுகளை வைத்திருந்தார்கள். தற்போது செல்போன்கள் தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கி விட்டன. படிப்பு, வேலையில் ஆண்களுடன் பெண்கள் போட்டி போடலாம். கல்பனா சாவ்லாபோல் விண்வெளியில் பறக்க முடியும். ஆனால் ஆண்கள் மது அருந்துகிறார்கள் என்று அவர்களும் செய்தால் மரியாதையை இழக்க நேரும்.

பெண்களை அடிமையாக யாரும் நடத்தவில்லை. அவர்களுக்கு தேவையான சுதந்திரம் வழங்கப்பட்டு உள்ளது. மனைவியை தவிர அனைத்து பெண்களையும் தாயாகவும் சகோதரியாகவும் நினைக்கும்படித்தான் நமது கலாசாரம் கற்றுக்கொடுத்து இருக்கிறது. பெண்கள் நெருப்பு போல் இருந்து சுற்றி உள்ளவர்களிடம் இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு பாக்யராஜ் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com