

சென்னை,
நடிகர் ராஜ்கிரணுக்கு எதிராக ரூ.40 லட்சம் முன்பணத்தை திருப்பிச் செலுத்தவில்லை என தொடரப்பட்ட வழக்கில், சென்னை ஐகோர்ட்டு அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் சரவணன் என்பவர் நடிகர் ராஜ்கிரணுக்கு எதிராக புகார் அளித்திருந்தார். அதில், கடந்த 2022-ம் ஆண்டு திரைப்படத் தயாரிப்பு தொடர்பாக செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ராஜ்கிரண் ரூ.40 லட்சம் முன்பணம் பெற்றதாகவும், பின்னர் அந்த தொகையை திருப்பிச் செலுத்தவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில், சம்பவம் தொடர்பாக சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி நடிகர் ராஜ்கிரண் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது, தமக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இந்த விவகாரம் உண்மையில் உரிமையியல் (Civil) தொடர்பான பிரச்சினை என்றும், அதற்கு குற்றவியல் சாயம் பூசப்பட்டுள்ளதாகவும் ராஜ்கிரண் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி, அவர் 15 நாட்களுக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக ராஜ்கிரண், “தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நான். எங்கும் தப்பி விடமாட்டேன்” என தெரிவித்ததாக கூறப்படுகிறது.