

பெங்களூரு,
தர்ஷன் குடும்பத்துக்கு எதிராக அவதூறாக பேசியதாக கூறி, நடிகர் தன்வீர் மீது மானநஷ்ட வழக்கு கோரி பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் விஜயலட்சுமி மனு தாக்கல் செய்துள்ளார்.
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் தர்ஷன். இவர், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கில் கோர்ட்டு விசாரணைக்கு ஆகும் செலவுக்காக தர்ஷன் மனைவி விஜயலட்சுமியிடம் இருந்து நடிகர் தன்வீர் பல கோடி ரூபாய் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் அவர் செலவு தகவல்களை சரியாக கொடுக்கவில்லை.
இதுதொடர்பாக நடிகர் தன்வீர்,விஜயலட்சுமி இடையே மோதல் உருவானது. இதனால் தர்ஷன் மனைவி விஜயலட்சுமி குறித்து தன்வீர் அவதூறாக பேசி இருந்தார். தர்ஷன் குடும்பத்தினர் பற்றியும் அவர் பேசி இருந்தார். இதுதொடர்பாக ஏற்கனவே பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர், பசவேசுவராநகர் உள்பட 3 போலீஸ் நிலையங்களில் நடிகர் தன்வீர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், தர்ஷன், தனது குடும்பத்தினர் குறித்து அவதூறாக பேசிய தன்வீருக்கு எதிராக மானநஷ்ட கிரிமினல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவும், தனது குடும்பத்துக்கு எதிராக அவதூறாக பேசுவதற்கும் தடை விதிக்கும்படி பெங்களூரு சிட்டிசிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் விஜயலட்சுமி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவுடன் தன்வீர் பேசிய ஆடியோ, பிற ஆவணங்களும் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவை கோர்ட்டு நேற்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. விஜயலட்சுமி தாக்கல் செய்த மனு மீது வருகிற 30-ந் தேதி விசாரணை நடத்தப்படும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனால் நடிகர் தன்வீருக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன், தர்ஷன் குடும்பத்துடனான மோதல் அதிகரித்துள்ளது.