நடிகை சோனாலி போகத் மரணத்தில் சதி திட்டம்; சகோதரி குற்றச்சாட்டு

நடிகை சோனாலி போகத் மரணத்தில் சதி திட்டம் உள்ளது என அவரது சகோதரி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
நடிகை சோனாலி போகத் மரணத்தில் சதி திட்டம்; சகோதரி குற்றச்சாட்டு
Published on

பனாஜி,

அரியானா, புதுடெல்லி மற்றும் சண்டிகர் பா.ஜ.க.வின் முக்கிய உறுப்பினராக இருந்தவர் சோனாலி போகத் (வயது 42). அக்கட்சியின் மகளிர் அணியின் முன்னாள் தேசிய துணை தலைவராகவும் இருந்துள்ளார். பா.ஜ.க. தேசிய செயல் குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

2019-ம் ஆண்டு நடந்த அரியானா சட்டசபை தேர்தலில் குல்தீப் பிஷ்னோய்க்கு எதிராக ஆதம்பூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

எட்டு ஆண்டுகளுக்கு முன் தூர்தர்சனில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ஜீ டி.வி.யின் பிரபல தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார். இதுதவிர, வெப் தொடரிலும் நடித்துள்ளார்.

பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர், டிக்டாக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள செயலிகளில் தனது வீடியோக்களை வெளியிட்டு அதிக பார்வையாளர்களையும் பெற்றுள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில், கோவாவுக்கு சுற்றுலா சென்ற சோனாலிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அவர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சோனாலி ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என அறிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சோனாலியின் மரணம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், சோனாலி போகத் மரணத்தில் சதி திட்டம் உள்ளது. உணவு சாப்பிட்ட பின்னர், அசவுகரியம் ஏற்பட்டு உள்ளது என அவர் கூறினார். அவரது உணவில் விஷம் கலக்கப்பட்டு உள்ளது என சோனாலியின் சகோதரி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

சோனாலி, சிலருடன் கோவாவுக்கு நேற்று சென்றார். இரவில் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு அடுத்த நாள் வீட்டுக்கு திரும்பியுள்ளார். ஒரு சில மணிநேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதனால், அவரது மரணத்தில் சதி திட்டம் தீட்டப்பட்டு உள்ளது என சோனாலியின் சகோதரி குற்றச்சாட்டு கூறியுள்ளார். எனினும், சோனாலியின் மரணத்தில் சந்தேகத்திற்குரிய விசயம் எதுவும் இல்லை என போலீசார் கூறியுள்ளனர்.

இதுபற்றி கோவா டி.ஜி.பி. ஜஸ்பால் சிங் கூறும்போது, இதுவரை எங்களுக்கு சந்தேகத்திற்குரிய விசயம் எதுவும் தென்படவில்லை. ஆனால், பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே என்ன விவரம் என்பது தெரிய வரும் என கூறியுள்ளார்.

சோனாலியின் உடல் பாம்போலிம் நகரில் உள்ள கோவா மருத்துவ கல்லூரியில் வைக்கப்பட்டு உள்ளது. அவரது குடும்பத்தினர் வந்த பின்னர், உடல் நாளைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட கூடும் என கூறப்படுகிறது.

சோனாலியின் கணவர் சஞ்சய் போகத் கடந்த 2016-ம் ஆண்டு பண்ணை வீட்டில் இருந்தபோது, மர்ம மரணம் அடைந்துள்ளார். இந்நிலையில், சோனாலியின் மரணத்திலும் சந்தேகம் உள்ளது என அவரது சகோதரி குற்றச்சாட்டு கிளப்பியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com