கன்னட மொழி குறித்து சர்ச்சை கருத்து: கமல்ஹாசன் மீதான வழக்கு, சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம்

கன்னட மொழி தொடர்பான இந்த சர்ச்சை மீண்டும் கோர்ட்டு விசாரணைக்கு வந்துள்ளதால் திரையுலக வட்டாரங்களில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னட மொழி குறித்து சர்ச்சை கருத்து: கமல்ஹாசன் மீதான வழக்கு, சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம்
Published on

பெங்களூரு,

நடிகரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் கடந்த ஆண்டு (2025) கன்னட மொழி குறித்து தெரிவித்த கருத்து தொடர்பான வழக்கு, தற்போது பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது.

கன்னட மொழி குறித்த கருத்தால் சர்ச்சை

கடந்த ஆண்டு நடைபெற்ற 'தக் லைப்' திரைப்பட விழா ஒன்றில், "கன்னடம் தமிழில் இருந்து பிறந்த மொழி" என்ற பொருள்படும் வகையில் கமல்ஹாசன் பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு கர்நாடகத்தில் பல்வேறு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

கமல்ஹாசன் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும், அவரது திரைப்படங்களை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்கக் கூடாது என்றும் கன்னட அமைப்புகள் மற்றும் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், தாம் தவறாக எதுவும் பேசவில்லை என்பதால் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று கமல்ஹாசன் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

22-ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

இந்த விவகாரம் தொடர்பாக கனகபுரா கோர்ட்டில் தனிநபர் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதற்கிடையில், கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த வழக்கு பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

கன்னட மொழி தொடர்பான இந்த சர்ச்சை மீண்டும் கோர்ட்டு விசாரணைக்கு வந்துள்ளதால், கர்நாடக அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com