என்னை மன்னித்து விடுங்கள் – 'இரவின் நிழல்' பட நடிகை

'இரவின் நிழல்' பட நடிகை பிரகிடா தான் பேசிய சர்ச்சைக் கருத்துக்கு மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவித்துள்ளார்.
என்னை மன்னித்து விடுங்கள் – 'இரவின் நிழல்' பட நடிகை
Published on

ஆஹா கல்யாணம் என்ற வெப் தொடரில் பவி டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் பிரிகிடா. இவர் தற்போது பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகி உள்ள இரவின் நிழல் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்ற வந்த பிரிகிடாவுக்கு பார்த்திபன் கதாநாயகி வாய்ப்பு கொடுத்துள்ளார். இந்த நிலையில் சேரி மக்கள் குறித்து பிரிகிடா கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இரவின் நிழல் படத்தில் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பது குறித்து பிரிகிடாவிடம் கேள்வி எழுப்பியபோது, ''இரவின் நிழல் படத்தின் கதை தனிஒருவனை பற்றியது. அவன் வாழ்க்கையில் கெட்டது மட்டுமே நடந்துள்ளது. சேரிக்கு போனால் அங்கு அந்த மாதிரியான வார்த்தைகளைத்தான் கேட்க முடியும். சினிமாவுக்காக எதையும் மாற்றி விட முடியாது.' என்றார். இதையடுத்து சேரி மக்களை பிரிகிடா அவமதித்து விட்டதாக எதிர்ப்புகள் கிளம்பின. சமூக வலைத்தளத்தில் பலரும் அவரை கண்டித்தனர். இதையடுத்து பிரிகிடா டுவிட்டரில் மன்னிப்பு கேட்டார். அவருக்காக நடிகர் பார்த்திபனும் வருத்தம் தெரிவித்து உள்ளார்.

டுவிட்டரில் பார்த்திபன் வெளியிட்டுள்ள பதிவில், "பிரிகிடா சார்பாக நானும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், மனக்காயம் அடைந்தவர்களிடம். 1989-ல் நடக்கும் கதையிது. 2022-ல் சேரி மக்களிடம் உள்ள மாற்றம், கடுமையான போராட்டத்தில் அவர்கள் பெற்ற கல்வியினால் என் படங்கள் பெரும்பாலும் சேரி மக்களை ஹீரோ ஆக்குவதே!" என குறிப்பிட்டுள்ளார்.

நடிகை பிரகிடா தனது ட்விட்டர் பக்கத்தில், ''நான் கூறிய வார்த்தைகளுக்கு இதயபூர்வமாக மன்னிப்புக்கேட்டுகொள்கிறேன். இடத்தை பொறுத்து மொழி மாறுபடும் என்றுதான் கூற வந்தேன், ஆனால் அது இப்படி தவறாக மாறிவிட்டது. என்னை மன்னித்து விடுங்கள்'' பதிவிட்டிருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com