

கடந்த 2023ல் சாலையை கடந்தபோது யூடியூபர் இர்பானின் கார் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.30.69 லட்சம் இழப்பீடு வழங்க சிறு வழக்குகள் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த பிரபல யூடியூபர் இர்பான். இவர் தமிழகத்தில் உள்ள ஓட்டல்களுக்கு சென்று உணவு சாப்பிட்டு அதற்கு ரிவ்யூ கொடுத்து பிரபலமானார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே கோனாதி முரளி நகரை சேர்ந்தவர் பத்மாவதி(55). இவர் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார். பணி முடிந்த நிலையில் மறைமலைநகரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று மீண்டும் பொத்தேரி வீட்டிற்கு செல்ல மறைமலைநகரில் ஜி.எஸ்.டி சாலையை கடக்கும் போது விலை உயர்ந்த சொகுசு கார் வேகமாக வந்து பத்மாவதி மீது மோதியது. இந்த விபத்தில் பத்மாவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அதி வேகமாக வந்து விபத்து ஏற்படுத்திய சென்னை சித்தாலப்பாக்கத்தை சேர்ந்த அசாருதீன் (34) மீது வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய சொகுசு காரை காவல் நிலையம் எடுத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அது பிரபல யூடியூபர் இர்பானின் கார் என்பதும், இர்பானின் கார் ஓட்டுநர் அசாரூதின் தான் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பான வழக்கில் உயிரிழந்த மூதாட்டி பத்மாவதி குடும்பத்திற்கு ரூ.30.69 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காரின் காப்பீட்டு நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பு இந்த நிவாரணத் தொகையை உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
யூடியூபர் இர்பான் தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை வீடியோ வெளியிட்ட நிலையில் அவருக்கு எதிராக வழக்கு பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.