நடிகை சமந்தா குறித்து சர்ச்சை பதிவு - மந்திரிக்கு தெலுங்கானா நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகை சமந்தா விவாகரத்து குறித்த சர்ச்சையான பதிவை, மந்திரி கொண்டா சுரேகா நீக்க வேண்டும் என்று தெலுங்கானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை சமந்தா குறித்து சர்ச்சை பதிவு - மந்திரிக்கு தெலுங்கானா நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Published on

ஐதராபாத்,

நடிகை சமந்தா-நாக சைதன்யா விவாகரத்துக்கு பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) கட்சியின் செயல் நிர்வாக தலைவரும், முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகனுமான கே.டி. ராமராவ் தான் காரணம் என்றும், அவர் செய்த சில விஷயங்களால் சமந்தா மட்டுமின்றி பல நடிகைகள் பாதிக்கப்பட்டதாகவும் தெலுங்கானா மாநில காங்கிரஸ் பெண் மந்திரி கொண்டா சுரேகா தெரிவித்திருந்தார்.

சமந்தா - நாகசைதன்யா விவாகரத்துக்கு அரசியல் தலையீடுகளே காரணம் என்று கூறிய மந்திரி சுரேகாவுக்கு தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த சூழலில், தான் கூறிய கருத்துகளை திரும்ப பெறுவதாக மந்திரி சுரேகா தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "பெண்களை ஓர் அரசியல் தலைவர் எப்படி சிறுமைப்படுத்தினார் என்று தான் சொல்ல வந்தேன். சமந்தாவின் உணர்வுகளை புண்படுத்துவது என் நோக்கமல்ல. எனது கருத்தால் சமந்தாவோ, அவரது ரசிகர்களோ புண்பட்டிருந்தால் நான் சொன்னதை நிபந்தனையின்றி திரும்ப பெறுகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தெலுங்கானா காங்கிரஸ் மந்திரி கொண்டா சுரேகா மீது நடிகர் நாகார்ஜுனா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். மந்திரி கொண்டா சுரேகா தனது குடும்ப உறுப்பினர்களின் கவுரவம் மற்றும் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் நாகார்ஜுனா நாம்பள்ளி நீதிமன்றத்தில் கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சமந்தா மற்றும் நாக சைதன்யா தொடர்பான சர்ச்சை பதிவை உடனடியாக தெலுங்கானா மந்திரி கொண்டா சுரேகா நீக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com