

சென்னை,
பேராண்மை' படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர், தன்ஷிகா. தஞ்சையில் பிறந்த தன்ஷிகா சாய்பாபா மீது கொண்ட பக்தி காரணமாக தன் பெயரை சாய் தன்ஷிகா என மாற்றிக்கொண்டார். இவர் "மாஞ்சா வேலு, பேராண்மை, கபாலி, இருட்டு" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் தற்போது, கவுதம் கிருஷ்ணா இயக்கத்தில் 'யோகிடா' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஜப்பட்மா சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அருணகிரி மற்றும் ராஜ்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இதில் ஷாயாஜி ஷிண்டே, மனோபாலா, கபீர் துஹான் சிங், எஸ்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படம் பெண்களை மையமாக கொண்டு ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகை சாய் தன்ஷிகா குறுகிய காலத்தில் அதிக டிரான்ஸ்பர் பெற்ற நேர்மையான போலீஸ் அதிகாரியாகநடித்துள்ளார். ஒரு கொலையை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகை சாய் தன்ஷிகா நடித்துள்ள ‘யோகிடா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர், “கபாலி படத்தில் ரஜினி சாரின் மகளாக நடித்தேன். அதில் என்னுடைய பெயர் யோகி. அப்படித்தான் இந்த ‘யோகிடா’ ஆரம்பித்தது. இந்த படத்திற்காக டைட்டிலை யோசிக்கும் போது, கபாலி படத்தில் உள்ளது போல ஹேர் ஸ்டைல், ஆக்சன் இந்த படத்தில் இருந்தது. அதனால் தான் இந்த டைட்டில் வைத்தோம். கபாலி படத்தின் போது நல்ல வரவேற்பு இருந்தது. நிறைய பெண்கள் அந்த படத்திற்கு பிறகு தங்களது முடியை வெட்டிக் கொண்டனர். ஒரு படம் எந்த அளவிற்கு அனைவரையும் இம்பாக்ட் செய்கிறது என்பதை அன்று புரிந்து கொண்டேன். பெண்கள் தங்களது முடியை முக்கியமானதாக நினைப்பார்கள். அதைப் பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்தது. இன்று நிறைய படங்கள் வந்து கொண்டிருக்கிறது.கொரோனாவிற்கு பிறகு ஓடிடி தளங்களின் வருகை அதிகரித்துள்ளது. திரையரங்குகளில் படம் குறைவாகவும், ஓடிடி தளங்களில் அதிகமாகவும் வெளியாகி வருகின்றன. ஒரு படத்தை ரிலீஸ் செய்வதற்கு பெரிய சிக்கல்கள் இருந்து வருகின்றன. இது போன்ற ஒரு தருணத்தில் எங்களது படத்தை வெளிக்கொண்டு வரும் சிவ கணேஷ் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பேராண்மை படத்தில் முதல் முறையாக ஆக்சன் காட்சிகளில் நடித்தேன். அதுதான் இன்று வரை எனக்கு உதவி வருகிறது. இந்த படத்தின் அனைத்து ஆக்சன் காட்சிகளுக்கும் டூப் இல்லாமல் நானே செய்தேன். பெண்கள் நினைத்தால் ஆண்களுக்கு ஈடாக சண்டை காட்சிகள் பண்ண முடியும். இன்றைய சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகி வருகிறது. பெண்களை உடல் ரீதியாக துன்புறுத்தினால் அதன் பிறகு அவர்களால் வளர முடியாது என்று நினைக்கின்றனர். அதைத் தாண்டி வர முடியும் என்பதை தான் யோகி டா படம் பேசுகிறது. எங்களால் முடிந்த அளவிற்கு பெண்களுக்காக இந்த படத்தை எடுத்துள்ளோம். என்னால் முடிந்தவரை உழைப்பை கொடுத்து இந்த படத்தை உங்களுக்காக கொண்டு வருகிறேன்.” என்றார்.