

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ராமாயணம்’. இதில் சாய் பல்லவி சீதையாகவும், ரன்பீர் கபூர் ராமராகவும், யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இதன் முதல் பாகம் கடந்த நவம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தில் சீதையாக நடித்தது தனது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாக அமைந்ததாக சாய் பல்லவி தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற ‘We The Women’ நிகழ்ச்சியில் கலந்துரையாடியபோது, சீதையாக நடித்த பிறகு வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்துப் பேசினார்.
அப்போது, "ஒவ்வொரு திரைப்படத்திலும் நடிக்கும்போது அந்த கதாபாத்திரத்தின் ஒரு பகுதியை நம் மனதில் சுமந்து செல்கிறோம். அதுபோல சீதை கதாபாத்திரமும் என்னுள் சில தனிப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அவை எனக்கு மட்டுமே உரியவை" என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், ‘ராமாயணம்’ படத்தில் சீதையாக சாய் பல்லவி தேர்வு செய்யப்பட்டதையும், அவரது தோற்றத்தையும் விமர்சித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டன. இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர் கூறியதாவது:
"சீதா மாதா எப்படி அழகாக இருக்க வேண்டும் என்பது போன்ற சமூக வலைதளக் கருத்துகளை நான் பார்க்காமல் இல்லை. ஆனால், இதுபோன்ற விமர்சனங்கள் நம்முடைய மன உறுதியைக் குலைக்குமானால், நம்மை இன்னும் வலுப்படுத்திக்கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவரை, ஒரு மனிதராக என்னால் முடிந்த அளவுக்கு மன உறுதியுடன் இருக்கிறேன். கருத்துகள் என்பவை கருத்துகள்தான். நமக்குள் தன்னம்பிக்கையும் மன உறுதியும் இருந்தால், உலகத்தின் விமர்சனங்களை எதிர்கொள்ளலாம் அல்லது அவற்றைப் புறக்கணித்துவிட்டு முன்னேறலாம்" என்றார்.
மேலும், திரைப்படங்களில் கவர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அதன் தனித்துவமும், கதைக்கு அது அளிக்கும் பங்களிப்பும் முக்கியம் எனக் குறிப்பிட்டார்.
தனது திரைப்பயணத்தில் அர்த்தமுள்ள கதாபாத்திரங்களுக்காக சுமார் 4 முதல் 5 ஆண்டுகள் வரை பொறுமையாகக் காத்திருந்ததாகவும், ஆரம்பத்தில் நல்ல வாய்ப்புகளைத் தேர்ந்தெடுப்பது எளிதானதாக இருக்கவில்லை என்றும் சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.