

‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி, சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் ரசிகர்கள் பெருமளவில் திரண்டதால் ரத்து செய்யப்பட்டது.
தனியிசை துறையில் ராப் பாடகராக அறிமுகமான ஹிப் ஹாப் ஆதி, பின்னர் இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் என தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். 'ஆம்பள', 'தனி ஒருவன்', 'அரண்மனை' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த அவர், கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான 'மீசையை முறுக்கு' திரைப்படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 'நட்பே துணை', 'நான் சிரித்தால்', 'சிவகுமாரின் சபதம்', 'அன்பறிவு' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
கல்லூரி மாணவனின் கனவு, காதல், வாழ்க்கைப் போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவான ‘மீசைய முறுக்கு ’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘மீசைய முறுக்கு 2’ படத்தை ஹிப் ஹாப் ஆதி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துவருகிறார். இந்த படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சுந்தர் சி - குஷ்பு தயாரிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் சைத்ரா, கெட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் நாசர், கருணாஸ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.
முன்னதாக வெளியான ‘மீசைய முறுக்கு 2’படத்தின் டீசர் மற்றும் 'ஆரா 10/10', 'பப்பாளி பழமே' ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ படம் செப்டம்பர் 25ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்தது.
விரைவில் வெளியாகவுள்ள ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி, சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் நடைபெறுவதாக இருந்தது. இதனால் மாலில் ரசிகர்கள் குவியத் தொடங்கினர். ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இதையடுத்து நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் போலீசார் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
“மக்களின் பாதுகாப்பு கருதியும், காவல் துறையின் அறிவுறுத் தலின்படியும் என்னால் மேடை ஏற முடியவில்லை. ரசிகர்களின் கட்டுக்கடங்காத அன்பு ஒருபுறம் மகிழ்ச்சி தந்தாலும், உங்களோடு இந்த விழாவை கொண்டாட முடியவில்லை என்பதில் மிகுந்த வருத்தம் உண்டு. விரைவில் சந்திப்போம்” என ஹிப்ஹாப் ஆதி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.