சி.வி.சண்முகத்தின் பேச்சு மனிதகுலத்துக்கே வெட்கக்கேடானது - குஷ்பு
சென்னை,
முதல்வரின் ‘கனவைச் சொல்லுங்கள்’ திட்டம் குறித்து பேசியபோது, நடிகை ஒருவரை குறிப்பிட்டு சி.வி. சண்முகம் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சி.வி. சண்முகம் பேசியதாவது, ‘அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். மு.க.ஸ்டாலின் அதைவிட ஒரு படி மேலே சென்று உங்கள் கனவை சொல்லுங்கள் என்கிறார். எனக்கு ஒரு நடிகை(நடிகையின் பெயரை குறிப்பிட்டு) வேணும் இவர் நிறைவேற்றுவாரா. நடிகையை எனக்கு கல்யாணம் பண்ணி வையுங்கள் என்று கேட்பார்கள் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவாரா?’ என்றார்.
இந்நிலையில், நீங்கள் மற்றவர்களை மதித்தால்தான் உங்களுக்கும் மரியாதை கிடைக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு பாஜக நிர்வாகி குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.
“நடிகை குறித்து சி.வி.சண்முகத்தின் பேச்சு அவமதிப்பு மட்டுமல்ல, மனிதகுலத்துக்கே வெட்கக்கேடானது. உங்கள் இஷ்டத்துக்கு பேச நடிகைகள் ஒன்றும் உங்கள் சொத்தோ, உடமைகளோ அல்ல. நடிகை குறித்து பேசும்முன் அதே இடத்தில் உங்கள் அம்மா, தங்கை, மனைவி, மகள் இருந்தால் இப்படி பேசுவீர்களா? ஒரு பெண்ணை இழிவுபடுத்துவது என்பது பேசுபவரின் மனப்பான்மை, வளர்ப்பை காட்டுகிறது; மரியாதை ஒருவழிப் பாதையல்ல; நீங்கள் மற்றவர்களை மதித்தால்தான் உங்களுக்கும் மரியாதை கிடைக்கும்” என்று குஷ்பு கூறியுள்ளார்.

