"டிடி நெக்ஸ்ட் லெவல்" சினிமா விமர்சனம்

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், கஸ்தூரி நடித்துள்ள ‘டி.டி. நெக்ஸ்ட் லெவல்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
பேயாக சுற்றி திரியும் செல்வராகவன், சினிமா படங்களை கேலி செய்யும் விமர்சகர்களை தனக்கு சொந்தமான தியேட்டருக்கு வரவழைத்து கொலை செய்து வருகிறார். முன்னணி விமர்சகரான சந்தானத்தை அவரது குடும்பத்தினருடன் தியேட்டருக்கு அழைக்கும் செல்வராகவன், தியேட்டரில் ஓடும் ஒரு பேய் படத்துக்குள்ளேயே அவர்களை அனுப்பி விடுகிறார். படத்துக்குள் சந்தானம் குடும்பத்தினரை கொலை செய்ய ஒரு கும்பல் அலைகிறார்கள். படம் முடிவதற்குள் அந்த கும்பலை கொன்றால் தான், குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்ற நிலையில் சந்தானம் போராடுகிறார். ஒருகட்டத்தில் அவரது காதலி கீத்திகா திவாரி பேயாக மாற, அவரை காப்பாற்ற வழிதெரியாமல் தவிக்கிறார் சந்தானம். படம் முடிவதற்குள் அவர் அந்த கும்பலை கொன்றாரா? தனது குடும்பத்தினரை காப்பாற்றினாரா? பேயாக மாறிய கீத்திகா திவாரியின் கதி என்ன? என்பதே படத்தின் மீதி கதை.
சினிமாவை பங்கமில்லாமல் கலாய்த்து தள்ளும் கதாபாத்திரத்தில் சந்தானம் புகுந்து விளையாடியிருக்கிறார். பேயோடு அவர் மோதும் காட்சிகளில் கலகலப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லை. அவரது 'டைமிங்' காமெடிகளும், 'ரைமிங்' பேச்சுகளும் ரசிப்பு.
அழகான கதாநாயகியாக ஆட்டம் போடுகிறார், கீத்திகா திவாரி. கண்களுக்கும் விருந்து தருகிறார்.போலீஸ் அதிகாரியாக வரும் கவுதம் மேனன், கப்பல் கேப்டனாக வரும் நிழல்கள் ரவியும் மனதோடு ஒட்டிக்கொள்கிறார்கள். கஸ்தூரியும், யாஷிகா ஆனந்தும் கவர்ச்சியில்லாத குறையை பார்த்துக்கொண்டுள்ளார்கள். தொடையழகி பட்டத்துக்கு போட்டி போட்டுள்ளார்கள்.
மொட்டை ராஜேந்திரன், 'லொள்ளுசபா' மாறன், கிங்ஸ்லி கூட்டணி காமெடிக்கு கியாரண்டி. பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோரும் கதாபாத்திரங்களுக்கு அழகு சேர்க்கிறார்கள்.
தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவில் கடலும், காடும் அழகுற காட்சி தருகிறது. ஆப்ரோவின் இசை படத்துடன் ஒன்ற செய்கிறது.
'லாஜிக்' மீறல்கள் இருந்தாலும், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொண்ட திரைக்கதை அதை மறக்கடித்து விடுகிறது.
பேய் கதைக்கே உரிய இலக்கணத்தை முற்றிலும் மாற்றி, வித்தியாசமான கதைக்களத்தில் ரசித்து மகிழும்படியான படமாக கொடுத்து கவனம் ஈர்த்துள்ளார், இயக்குனர் பிரேம் ஆனந்த்.
டி.டி. நெக்ஸ்ட் லெவல் - புதுமை.






