

சென்னை,
த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. படத்தை சூர்யா தயாரித்து, நடித்துள்ளார்.
இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தனர். ஆனால், இந்தப் படத்திற்கு பாமக தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைத்தளங்களிலும் சூர்யாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பதிவுகள் வெளியிடப்பட்டன. அதேவேளையில், சூர்யாவுக்கு ஆதரவாகவும் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் சூர்யா தனது டுவிட்டரில் வெளியிட்ட டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது; ஜெய் பீம் திரைப்பட விவகாரத்தில் எனக்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி உங்கள் அன்பு என்னை திக்குமுக்காடச் செய்துள்ளது எனப்பதிவிட்டுள்ளார்.